ஐபிஎல் ஏலம்! தமிழன் நடராஜனுக்கு மட்டும் பாரபட்சமா? விலையை பார்த்து கேள்வியெழுப்பும் ரசிகர்கள்
ஐபிஎல் மெகா ஏலத்தில் தமிழக வீரர் டி.நடராஜனுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் வேறு சில இளம் வீரர்களுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் 2022 மெகா ஏலத்திற்காக இறுதி செய்யப்பட்ட வீரர்களின் பட்டியலும், அவர்களின் அடிப்படை தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தை சேர்ந்த மொத்தம் 30 வீரர்களின் பெயர்கள் இந்த முறை மெகா ஏலத்தில் இடம்பெற்றுள்ளது.
இதில் யார்க்கர் மன்னனான நடராஜனுக்கு ரூ. 1 கோடி என்ற தொகையை அறிவித்துள்ளது பிசிசிஐ. இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் சர்வதேச களம் கண்டவர்கள், முன்னணி பவுலர்களுக்கு அடிப்படை தொகையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்படும். அதற்கு அடுத்த வரிசையில் இருப்பவர்களுக்கு ரூ. 1 1/2 கோடி நிர்ணயிக்கப்படும்.
ஒரே ஒரு சீசனில் நடராஜனின் ஆட்டத்தை பார்த்து 3 வடிவ கிரிக்கெட்டிலும் வாய்ப்புக் கொடுத்த பிசிசிஐயே தற்போது அவரை குறைந்த விலைக்கு இறக்கியுள்ளது.
ஆனால் ஃபார்ம் அவுட்டாகியுள்ள சில வீரர்களுக்கு ரூ. 2 கோடி அடிப்படை தொகையாக நிர்ணயித்துள்ளது. இதனால் நடராஜனுக்கு மட்டும் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, ஐபிஎல் அணிகளும் நடராஜன் மீது ஆர்வம் காட்டவில்லை. தற்போது தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர், ஆவேஷ் கான், ஹர்ஷல் பட்டேல் என நிறைய இளம் வீரர்கள் ஜொலித்து வருவதால், அடிப்படை தொகைக்கே நடராஜன் ஏலம் போவார் என கூறப்படுகிறது.