ராஜஸ்தானை கதறவிட்ட லோக்கி பெர்குசன், சிவம் மாவி! 86 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அபார வெற்றி
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 86 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.
ஐபிஎல் தொடரின் 54-வது லீக் ஆட்டம் சார்ஜாவில் இன்று நடைபெற்றது. அதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதியது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து, கொல்கத்தா அணியில் சார்பில் சுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். நல்ல தொடக்கத்தை தந்த இந்த ஜோடி, பவர் பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 34 ஓட்டங்கள் எடுத்தது.
தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, பின்னர் முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 79 ஓட்டங்கள் சேர்த்த நிலையில், வெங்கடேஷ் ஐயர் 38 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய நிதிஷ் ராணா வந்த வேகத்தில் சிக்ஸரும், பவுண்டரியும் அடித்து 5 பந்துகளில் 12 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து, சுப்மன் கில்லும், ராகுல் திரிபாதியும் ரன் ரேட்டை உயர்த்தினர்.
சுப்மன் கில் 40-வது பந்தில் அரைசதத்தை எட்டியநிலையில், 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் திரிபாதியும் 21 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ஓட்டங்கள் எடுத்தது.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தினேஷ் கார்த்திக் 14 ஓட்டங்களும், கேப்டன் மார்கன் 13 ஓட்டங்களும் எடுத்தனர்.
ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் கிறிஸ் மோரிஸ், சேத்தன் சகாரியா, ராகுல் திவாட்டியா மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆகிய நால்வரும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதனையடுத்து 172 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் சார்பில் ஜெய்ஸ்வால் மற்றும் லிவிங்ஸ்டோன் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.
இவர்களில் ஜெய்ஸ்வால் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 1 ஓட்டத்திலும், லிவிங்ஸ்டோன் 6 ஓட்டத்திலும் ஆட்டமிழந்தனர்.
கொல்கத்தா அணியின் சிறப்பான பந்துவீச்சின் மூலம் அடுத்து களமிறங்கிய அனுஜ் ராவத் (0) ஓட்டம் ஏதும் எடுக்காமலும், பிலிப்ஸ் 8 ஓட்டத்திலும், ஷிவம் துபே 18 ஓட்டங்களும், கிரிஸ் மோரிஸ் (0) ஓட்டம் ஏதும் எடுக்காமலும், ஜெயதேவ் உனத்கட் 6 ஓட்டங்களும், சேத்தன் சகாரியா 1 ஓட்டமும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் திவாட்டியா 44 (36) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் ராஜஸ்தான் அணி 16.1 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 85 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
கொல்கத்தா அணியின் சார்பில் அதிகபட்சமாக ஷிவம் மாவி 4 விக்கெட்டுகளும், பர்குசன் 3 விக்கெட்டுகளும், வருண் சக்ரவர்த்தி, ஷகிப் அல் ஹசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 86 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.