லக்னோ த்ரில் வெற்றி! 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது டெல்லி
ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது லக்னோ.
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 45-வது லீக் ஆட்டத்தில் கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி மற்றும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி துடுப்பாட முடிவு செய்தது. அதன்படி லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், குயின்டன் டி காக் களமிறங்கினர்.
இருவரும் தொடக்கம் முதல் அதிரடியாக ஓட்டங்கள் சேர்த்தனர். அணியின் எண்ணிக்கை 41-ஆக இருந்தபோது டி காக் 23 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த தீபக் ஹூடா ராகுலுடன் இணைந்து சிறப்பாக விளையாடினார்.
ஒரு புறம் கே. எல்.ராகுல், மறுபுறம் ஹூடா என இருவரும் டெல்லி அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர் .சிறப்பாக விளையாடிய ஹூடா 32 பந்துகளில், கே.எல். ராகுல் 35 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர் தொடர்ந்து விளையாடிய ஹூடா 52 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் களமிறங்கினார். பந்துகளை பவுண்டரி சிக்சருக்கு விரட்டி அதிரடியாக விளையாடிய ராகுல் 77 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து கடைசி சில ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி எண்ணிக்கையை கட்டுப்படுத்தியது.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 3 விக்கெட் இழப்பிற்கு 195 ஓட்டங்கள் எடுத்தது.
அதனைத் தொடர்ந்து 196 ஓட்டங்கள் இலக்குடன் டெல்லி அணி விளையாடியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் 3 ஓட்டங்களிலும், பிரித்வி ஷா 5 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர் பின்னர் வந்த மிட்செல் மார்ஷ், கேப்டன் ரிஷப் பண்ட், 2 விக்கெட்டுகள் இழந்தாலும் அதிரடியை விடவில்லை .இருவரும் பந்துகளை சிக்ஸர், பவுண்டரிக்கு பறக்க விட்டனர்.
லக்னோ வீரர் குருனால் பாண்டியா வீசிய ஒரு ஓவரில் 18 ஓட்டங்கள் அடித்தார் ரிஷாப் பண்ட் .அணியின் எண்ணிக்கை 73 ஓட்டங்களாக இருந்தபோது மார்ஷ் 37 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த லலித் யாதவ் 3 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
சிறப்பாக விளையாடிய பண்ட் 44 ஓட்டங்களில் விக்கெட்டை இழந்தார். ரோவ்மேன் பவெல் சிறிது நேரம் அதிரடியாக விளையாடினர். அவர் 35 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் அக்சர் படேல் போராடி 42 ஓட்டங்கள் எடுத்தார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 189 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி த்ரில் வெற்றி பெற்றது .