எதிரி வீரர்களை ஒரே அணியில் எடுத்த ஐபிஎல் அணிகள் : என்ன நடக்கப் போகுதோ என கவலை
நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் நேற்று தொடங்கிய நிலையில் அடுத்தடுத்து எதிர்பாராத பல சம்பவங்கள் நிகழ்ந்தன.
இந்தியாவில் மார்ச் மாதம் ஐபிஎல் தொடரை தொடங்க பிசிசிஐ தயாராகி வரும் நிலையில் இந்தாண்டு புதிதாக லக்னோ, அகமதாபாத் அணிகள் இணைந்துள்ளதால் வீரர்களுக்கான மெகா ஏலம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இதற்காக 590 வீரர்கள் அடங்கிய இறுதிப்பட்டியல் வெளியாகியிருந்தது.
முதல் நாள் நடைபெற்ற ஏலத்தில்எதிர்பாராத பல சம்பவங்கள் நிகழ்ந்தன. இளம் வீரர்களுக்காக போட்டி, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட பல மடங்கு ஏலம், சீனியர் வீரர்கள் விலை போகாதது என தரமான காட்சிகள் அரங்கேறின.
அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினும், இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லரும் இணைந்து விளையாடவுள்ளனர். கடந்த இரு சீசன்களுக்கு முன்பு நடைபெற்ற போட்டி ஒன்றில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய அஸ்வின், ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய ஜோஸ் பட்லரை மன்கடிங் முறையில் அவுட்டாகி கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தினார்.
அந்த போட்டியில் பட்லர் அதிரடியாக விளையாடிய நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடக்க போட்டி தலைகீழாக மாறி ராஜஸ்தான் பரிதாபமாக தோற்றது. இதனிடையே இப்போது இருவரும் ஒரே அணியில் விளையாடுவதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதேபோல் லக்னோ அணியில் ரஞ்சி கோப்பை முதல் ஐபிஎல் வரை பரம எதிரிகளாக உள்ள க்ரூணல் பாண்ட்யா மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களின் சண்டை ஊரறிந்த கதை என்பதால் நடப்பு ஐபிஎல் தொடரில் சொந்த அணிக்குள் என்னென்ன சம்பவங்கள் நடக்கப் போகுதோ என்ற கவலை எழுந்துள்ளது.