ஐபிஎல் ஏலத்தில் கோடிகளில் விலைப்போகவுள்ள 5 வீரர்கள் இவர்கள் தான்..!
ஐபிஎல் ஏலத்திற்கான இறுதிப் பட்டியலில் 590 வீரர்கள் இடம்பெற்றுள்ள நிலையில் ஜூனியர் உலகக்கோப்பையில் விளையாடி வரும் இளம் வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.
இந்தியாவில் பிசிசிஐயால் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரில் நடப்பாண்டு புதிதாக இரண்டு அணிகள் இணைவதால் வீரர்களுக்கான மெகா ஏலம் பெங்களூரு நகரில் பிப்ரவரி 12,13 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளது.
இதில் 1,214 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்ற நிலையில் 590 பேர் கொண்ட இறுதி பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் நிறைய ஆல்ரவுண்டர்கள் இடம் பெற்றுள்ளதால் அவர்களுக்கு தான் இம்முறை அதிக மவுசு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஏலத்தில் 5 வீரர்கள் கோடிக்கணக்கில் ஏலம் எடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலாவதாக இந்திய கிரிக்கெட்டின் அடுத்த விராட் கோலி என்று அழைக்கப்படும் டெல்லியை சேர்ந்த யாஷ் துல் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக ஆடிய ஆட்டம் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது. இவர் கடைசியாக விளையாடி 8 போட்டியில் நான்கில் அரைசதம் அடித்துள்ளார். எதிர்காலத்தில் பெரிய வீரராக வரும் அனைத்து தகுதியும் உள்ள யாஷின் அடிப்படை விலை 20 லட்சம் என்ற போதிலும் இவர் கோடிக்கணக்கில் ஏலம் போக வாய்ப்புள்ளது.
அடுத்தாக இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கும் ஆங்கிரிஷ்,கடந்த 8 போட்டிகளில் விளையாடி 379 ரன்களை குவித்தார். உகாண்டா அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். சுழற்பந்தும் வீச தெரியும் என்பதால் இவர் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்படலாம். இவரது அடிப்படை விலை ரூ.20 லட்சம் ஆகும்.
மூன்றாவதாக இந்திய ஜூனியர் அணியின் அதிரடி இளம் வீரராக விளங்கும் ராஜ் பவா, பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். கடந்த 8 போட்டியில் 308 ரன்களும், 12 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இவரது அடிப்படை விலை 20 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் அடுத்த ஹர்திக் பாண்டியா என்று போற்றப்படும் ஹங்கர்கேகர் வேகப்பந்துவீச்சிலும், அதிரடி பேட்டிங்கிற்கும் பெயர் போனவர். கடந்த 8 போட்டியில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியவர். இவரது அடிப்படை விலையும் 20 லட்சம் ரூபாய் ஆகும்.
ஜூனியர் உலகக் கோப்பையில் சுழற்பந்துவீச்சாளராக இடம்பெற்றுள்ள விக்கி ஆஷட்வால் 8 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது அடிப்படை விலையும் 20 லட்சம் ரூபாய் என்ற போதிலும் அதிக தொகைக்கு ஏலம் போக வாய்ப்புள்ளது.