டுபிளஸிஸ் வெறியாட்டம்! பஞ்சாப் அணிக்கு இமாலய இலக்கு..
2022 ஐபிஎல் தொடரின் மூன்றாவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு 206 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி.
பெங்களூரு அணிக்கு முன்னாள் சிஎஸ்கே வீரர் டுபிளஸிஸ் மற்றும் பஞ்சாப் அணிக்கு புதிய கேப்டனாக மாயங் அகர்வாலும் களமிறங்கினர். DY பாட்டில் மைதானத்தில் இதுவரை 17 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் இரண்டாவது பேட்டிங் செய்த அணிகள் 10 போட்டியில் வென்றுள்ளது.
அதன்படி, இந்த மைதானத்தில் இலக்குகளை துரத்துவது எளிதானது என்பதால் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி எண்ணிக்கையை குவிக்க வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்கியது.
போட்டியின் தொடக்கத்தில் டுபிளஸிஸ் பொறுமையாக விளையாடினார். 11 பந்துகளில் ஒரே ஒரு ரன் மட்டுமே அடித்த டுபிளஸிஸ், அதன் பிறகு தனது அதிரடியை காட்ட தொடக்கினார். மறுமுனையில் தொடக்க வீரராக விளையாடிய அனுஜ் ராவத் 20 பந்துகளில் 21 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, விராட் கோலி 3-வது வீரராக களமிறங்கினார்.
இந்த நிலையில் டுபிளஸிஸ் 14 ஓட்டங்கள் எடுத்திருந்த போது அவர் அடித்த பந்தை கேட்ச் பிடிக்கும் வாய்ப்பை பஞ்சாப் அணியின் ஷாரூக்கான் தவறவிட்டார். பின்னர் டுபிளஸிஸ் 19 ஓட்டங்கள் அடித்திருந்த போது ரன் அவுட் செய்யும் வாய்ப்பை பஞ்சாப் வீரர்கள் தவறவிட்டனர்.
காற்று இன்று நம் பக்கம் வீசுகிறது என்று சுதாரித்துக்கொண்ட அவர், இதற்கு மேல் சீறிப்பாயவேண்டியது தான் என வேகமாக அடித்து ஆட தொடங்கினார். 34 பந்துகளில் 23 ஓட்டங்கள் எடுத்திருந்த டுபிளஸிஸ் அடுத்த 10 பந்துகளில் 41 ஓட்டங்கள் விளாசினார். அதாவது 44 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார். இவருக்கு விராட் கோலி நல்ல உறுதுணையாக நின்று கம்பெனி கொடுக்க, ஆர்சிபி அணியின் எண்ணிக்கை உயர்ந்தது.
டுபிளஸிஸ் 57 பந்துகளில் 88 ஓட்டங்கள் குவித்த போது அடித்த பந்தை ஷாரூக்கான் கேட்ச் பிடித்தார். இந்த கேட்சின் போது விராட் கோலி மறுமுணைக்கு வந்துவிட, புதிய விதியின் படி அடுத்த வீரராக களமிறங்கிய தினேஷ் கார்த்திக்கே பேட்டிங் செய்ய வந்தார்.
இறுதியில் தினேஷ் கார்த்திக் தனது அதிரடி ஆட்டத்தை காட்டினார். 3 பவுண்டரி, 3 சிக்சர் என் பறக்கவிட்ட கார்த்திக், 14 பந்துகளில் 32 ஓட்டங்களை விளாசினார். விராட் கோலி தன் பங்கிற்கு 29 பந்துகளில் 41 ஓட்டங்கள் குவித்தார்.
இதனால் நிணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்பிற்கு 205 ஓட்டங்கள் எடுத்தது. பெங்களூரு அணி வீரர்கள் கடைசி 10 ஓவரில் 135 ஓட்டங்களை விளாசினர்.
இந்நிலையில், 206 எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பஞ்சாபி கிங்ஸ் அணி விளையாடி வருகிறது.