ராஜஸ்தானை பந்தாடிய ஹார்டிக் பாண்டியா: குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி!
ஐபிஎல்-லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது.
ஐபிஎல்-லின் லீக் போட்டிகள் கடந்த மாதம் 26ம் திகதி தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று வரும் நிலையில், இதன் 24வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
இதில் நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் குஜராத் டைட்டன்ஸ் அணியை பேட்டிங்கில் களமிறங்க அழைத்தது.
இதனை தொடர்ந்து பேட்டிங்கில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களை அதிரடியாக குவித்தது.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங்கில் அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா 52 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 8 பவுண்டரிகளுடன் 87 ஓட்டங்களை குவித்து இருந்தார்.
பந்துவீச்சை பொறுத்தவரை ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் 4 ஓவர்களில் 32 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றி இருந்தார்.
இதையடுத்து, 193 ஓட்டங்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து வெறும் 155 ஓட்டங்களை மட்டுமே சேர்த்து குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை ஜோஸ் பட்லர் மட்டுமே அதிகட்சமாக 24 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 8 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்களை சேர்த்து இருந்தார்.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்துவீச்சில் யாஷ் தயாள் மற்றும் லாக்கி பெர்குசன் ஆகியோர் 4 ஓவர்களை வீசி தலா 3 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.
குஜராத் அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியாவின் சிறப்பான பேட்டிங் மற்றும் அந்த அணியின் சிறப்பான பந்து வீச்சால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றிபெற்றுள்ளது.
மேலும் இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் வெற்றிபெற்றதன் மூலம் அந்த அணிக்காக 87 ஓட்டங்களை குவித்த ஹார்டிக் பாண்டியா ஆட்டநாயகனாக தேர்வு செய்யபட்டுள்ளார்.