முதல் மூன்று ஓவர்களில் லக்னோவை தட்டிவைத்த ஷமி! மிரட்டிச்சென்ற ஹூடா, பதோனி..
மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்து வரும் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி 158 ஓட்டங்கள் குவித்துள்ளது.
முந்தைய சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய ஹர்திக் பாண்டியா, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டனாக அவருக்கு இதுவே முதல் போட்டியாகும். கடந்த சீசன்களில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்த ராகுல் இப்போது லக்னோ அணியை வழிநடத்துகிறார்.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் இரு அணிகளுமே, ஐபிஎல் களத்துக்கு புதிதானவை என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்போட்டி நடந்துவருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதனைத்தொடர்ந்து துடுப்பாட குயின்டன் டி காக் - கேஎல் ராகுல் ஜோடி களமிறங்கியது. இந்த தொடரில் மிகவும் அபாயகரமான ஒப்பனர்களாக கருதப்படும் இந்த இருவரையும் முகமது ஷமி அடுத்தடுத்த ஓவர்களில் தனது வேகத்தால் வீழ்த்தினார்.
முதல் ஓவரின் முதல் பந்திலேயே கேஎல் ராகுலை டக் அவுட் செய்த ஷமி, தனது அடுத்த ஓவரில் 7 ஓட்டங்கள் எடுத்திருந்த குயின்டன் டி காக்கை போல்டாக்கி வெளியேற்றினார்.
இவர்கள் மட்டுமில்லாமல், தனது மூன்றாவது ஓவரில் மனீஷ் பாண்டேவையும் பெவிலியனுக்கு வழியனுப்பி வைத்தார் ஷமி. அதேபோல், வருண் ஆரோனும் அதிரடி ஆட்டக்காரர் எவின் லூயிஸை அவுட் ஆக்க நான்கு ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை குஜராத் கைப்பற்ற, லக்னோ தள்ளாடியது.
ஆட்டத்தின் திருப்பமாக ஐந்தாவது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த தீபக் ஹூடாவும், ஆயுஷ் பதோனியும் கூட்டணி சேர்ந்தனர். தில்லாக களமிறங்கிய இருவரும் குஜராத் அணி வீசிய பந்துகளை சிக்ஸர் பவுண்டரிகளாக விளாசினார்.
தீபக் ஹூடா 55 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ரஷீத் கான் பந்தில் அவுட் ஆனார். இருப்பினும் நல்ல பாரமில் இருந்த ஆயுஷ் பதோனி தனது அதிரடியை தொடர்ந்தார். அவரும் அரைசதம் கடந்து அணியின் எண்ணிக்கையை கூட்டினார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் லக்னோ அணி 6 விக்கெட் இழப்புக்கு 158 ஓட்டங்கள் எடுத்தது.
குஜராத் அணி தரப்பில் பந்துவீச்சில் மிரட்டிய முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், வருண் ஆரோன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்நிலையில், 159 வெற்றி இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் விளையாடிவருகிறது.