ராஜஸ்தானை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா வெற்றி
ராஜஸ்தான் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 47-வது லீக் ஆட்டத்தில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
தொடக்க வீரராக களமிறங்கிய படிக்கல் 2 ஓட்டங்களில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் பட்லர் உடன் அணியின் கேப்டன் சாம்சன் ஜோடி சேர்ந்தார். பட்லர் 22 ஓட்டங்களில் நடையை கட்ட அவரை தொடர்ந்து வந்த கருண் நாயர் 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
இருப்பினும் ஒரு முனையில் நிதானமாக விளையாடி வந்த சாம்சன் 38 பந்துகளில் அரைசதம் அடித்தார். 18-வது ஓவரில் 54 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் சிவம் மாவி பந்துவீச்சில் சாம்சன் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 152 ஓட்டங்கள் எடுத்தது.
கொல்கத்தா அணி தரப்பில் டிம் சௌதி 2 விக்கெட்களை கைப்பற்றினார். 153 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக தமிழகத்தை சேர்ந்த பாபா இந்திரஜித் - பின்ச் களமிறங்கினர். பின்ச் 4 ரன்களில் குல்தீப் சென் பந்துவீச்சிலும் பாபா இந்திரஜித் 15 ஓட்டங்களில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதன் பிறகு ஜோடி சேர்ந்த அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் - நிதிஷ் ராணா அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நிதானமாக விளையாடி வந்த ஷ்ரேயஸ் 34 ஓட்டங்களில் போல்ட் பந்தில் சாம்சன்-யிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து ரிங்கு சிங் களமிறங்கினார். கடைசி 3 ஓவரில் வெற்றிக்கு 31 ஓட்டங்கள் தேவைப்பட 18-வது ஓவரை சஹால் வீசினார். முதல் 2 பந்துகளை பவுண்டரி விளாசினார் ரிங்கு சிங். அந்த ஓவரில் 13 ஓட்டங்கள் வர , கடைசி 2 ஓவரில் 18 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
இறுதியில் 19. 1 ஓவர்களில் 158 ஓட்டங்கள் எடுத்து கொல்கத்தா அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
Gend jahan Rinku wahan ?@rinkusingh235 #KKRHaiTaiyaar #KKRvRR #IPL2022 pic.twitter.com/MmeAvmEGLV
— KolkataKnightRiders (@KKRiders) May 2, 2022
இதன் மூலம் தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வி அடைந்து இருந்த கொல்கத்தா தற்போது வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது.