அணு ஆலையில் பயங்கர வெடி விபத்து: பயங்கரவாத தாக்குதல் என குற்றஞ்சாட்டிய ஈரான்
ஈரானில் யுரேனியம் செறிவூட்டல் நடைபெறும் அணு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்ட நிலையில், இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல் இதுவென ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.
ஈரானின் இஸ்பகான் மாகாணத்திலுள்ள நாதன்ஸ் நகரில் யுரேனியம் செறிவூட்டும் புதிய ஆலையை கட்டி வருகிறது.
ஈரான் இந்தப் புதிய ஆலையை கட்டுவதற்கு அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இருப்பினும் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தின் வரம்புகளுக்கு திரும்பாமல் யுரேனியம் செறிவூட்டலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நாதன்ஸ் நகரில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் ஆலையில் யுரேனியத்தை விரைவாக செறிவூட்டும் புதிய மேம்பட்ட ஐ.ஆர்.6 ரக மையவிலக்குகளை பயன்படுத்த தொடங்கியுள்ளதாக ஈரான் நேற்று முன்தினம் அறிவித்தது.
இந்த நிலையில் நேற்று நாதன்ஸ் நகரின் யுரேனியம் செறிவூட்டும் ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்து காரணமாக ஆலையின் ஒரு பகுதி தீ பிடித்து எரிந்தது. மேலும் இந்த வெடி விபத்தால் ஆலையில் மின் வினியோகம் தடைபட்டது.
இருப்பினும், இந்த விபத்தில் ஆலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என ஈரானின் சிவிலியன் அணுசக்தி திட்டத்தின் செய்தி தொடர்பாளர் பெஹ்ரூஸ் கமல்வெண்டி கூறியுள்ளார்.
மேலும் ஆலையில் பெரிய அளவில் பொருள் சேதம் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வெடி விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியாத நிலையில் இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பெஹ்ரூஸ் கமல்வெண்டி கூறியுள்ளார்.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளிடையே ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில் இந்த விபத்து நடந்துள்ளது.
இந்த நிலையில், நாதன்ஸ் விபத்துக்கு இஸ்ரேல் சைபர் தாக்குதலே காரணம் எனவும், இது பயங்கரவாத நடவடிக்கை எனவும் ஈரான் பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
கடந்தாண்டு ஜூலை மாதம் இந்த ஆலையில் கட்டுமானப்பணிகள் நடந்து கொண்டிருந்தபோது பயங்கர தீ விபத்து நேரிட்டதும்,
இதில் பல லட்சம் மதிப்புள்ள நவீன எந்திரங்கள் எரிந்து நாசமானதும், இது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் என ஈரான் குற்றம் சாட்டியதும் குறிப்பிடத்தக்கது.