ஈரான் தாக்குதல்... அமெரிக்காவுடன் கைகோர்த்த பிரித்தானியாவுக்கு கிடைத்த அதிர்ச்சி
ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலும், அதற்கு ஈரான் கொடுத்துவரும் பதிலடியும், அமைதியாக வாழ்ந்துவரும் அப்பாவி மக்களுக்கு தேவையில்லாமல் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன.
ஆம், ஈரான் தற்போது தங்களைத் தாக்கிய இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மட்டுமின்றி, அவர்களுடன் நேரடியாக மோதாத நாடுகள் மீதும் தாக்குதல் நடத்திவருகிறது.

பிரித்தானியாவைப் பொருத்தவரை, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலுக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று கூறியும், பிரித்தானிய மக்களுக்கும் ஆபத்து உருவாகியுள்ளது.
பிரித்தானிய மக்களுக்கும் ஆபத்து
ஆம், மத்திய கிழக்கு நாடுகளில் சுமார் 200,000 பிரித்தானியர்கள் தற்போது இருக்கிறார்கள். அந்த பகுதியிலுள்ள பல்வேறு நாடுகளில் பிரித்தானிய ராணுவ தளங்கள் உள்ளன.
இந்நிலையில், ஈரான் மத்திய கிழக்கிலுள்ள மற்ற நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதால், அங்குள்ள பிரித்தானியர்களுக்கும் ஆபத்து உருவாகியுள்ளது.
இந்நிலையில், பிரித்தானியா ஈரானுடனான மோதலில் பங்கேற்காத நிலையிலும், சில நாடுகளிலுள்ள பிரித்தானிய ராணுவ தளங்களை நோக்கி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

குறிப்பாக, சைப்ரஸ் நாட்டிலுள்ள பிரித்தானிய ராணுவ தளம் நேற்று நள்ளிரவு தாக்கப்பட்டுள்ளது.
ஏவுகணைகளை விமானப்படை தடுத்து அழித்துவிட்டாலும், ட்ரோன்கள் தாக்கியதில் விமான ஓடுபாதை சேதமடைந்துள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
அதைத் தொடர்ந்து நேற்றிரவு எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்க, ராணுவத்தினர் மற்றும் அவர்களுடைய குடும்பங்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அவர்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விடயம் என்னவென்றால், நேற்று, பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அந்த உரையில், ஆரம்பம் முதலே ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பிரித்தானியா கைகோர்க்கவில்லை என்றும், ஆனாலும், அப்பாவி பிரித்தானியர்கள் வாழும் நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி அவர்களுக்கு அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளதாகவும், ஆகவே, வேறு வழியில்லாமல், தாக்குதலில் அமெரிக்காவுடன் கைகோர்க்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் ஸ்டார்மர் தெரிவித்தார்.
அதாவது, பல்வேறு நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள பிரித்தானிய ராணுவ தளங்களை பயன்படுத்திக்கொள்ள அமெரிக்க ராணுவத்துக்கு பிரித்தானியா அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது.
ஆனால், அதிரவைக்கும் வகையில், ஸ்டார்மர் உரையாற்றி சில மணி நேரங்களுக்குள் சைப்ரஸ் நாட்டிலுள்ள பிரித்தானிய ராணுவ தளம் தாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |