ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும்... கவலை தெரிவித்துள்ள ஜேர்மன் அரசியல்வாதிகள்
ஈரான் தரப்பிலிருந்து உலகத்தலைவர்கள் பலருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, ஜேர்மன் மண்ணில் ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என ஜேர்மன் அரசியல்வாதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
உலகத்தலைவர்கள் பலருக்கு மிரட்டல்
ஈரான் ஊடகமான Hamshahri, ஈரான் உச்சத் தலைவரான அலி கமேனி கொல்லப்பட்டதற்காக, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உட்பட 13 உலக நாடுகளின் தலைவர்களை பழிவாங்க இருப்பதாக செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.

அந்த தலைவர்களில் பட்டியலில், ஜேர்மன் சேன்சலரான பிரெட்ரிக் மெர்ஸின் பெயரும் அடங்கும்!
கவலை தெரிவித்துள்ள ஜேர்மன் அரசியல்வாதிகள்
அந்த செய்தியைத் தொடர்ந்து, ஜேர்மன் மண்ணில் ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என ஜேர்மன் அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகள் பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.
ஜேர்மனியின் உளவு அமைப்புகளைக் கண்காணிக்கும் ஜேர்மன் நாடாளுமன்ற மேற்பார்வைக் குழுவின் தலைவரான மார்க் ஹென்ரிச்மன் இது குறித்து கூறும்போது, ஈரானின் உளவு அமைப்புகள் ஐரோப்பாவிலும் தாக்குதல்களைத் திட்டமிடுகின்றன என்று நாம் கருத வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார்.

ஜேர்மன் பாதுகாப்புத்துறையினர், ’ஒருமுறை பயன்படுத்தப்படும் ஏஜண்டுகள்’ என அழைக்கப்படும், ஒரே ஒரு தாக்குதலை நடத்துவதற்காக மட்டும் பணியமர்த்தப்படும் நபர்கள் குறித்து கவலை உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஈரான் வம்சாவளியினரும், ஜேர்மன் நாடாளுமன்றத் துணைத்தலைவருமான உமித் நூரிபூர், ஈரானால் ஜேர்மனிக்கு அனுப்பப்படும் பயங்கரவாதிகள் தொடர்பில் எங்களுக்கு பல கடந்த கால அனுபவங்கள் உள்ளன.
அதாவது, ஈரான் அரசு, பத்திரிகைகளை தணிக்கை செய்துதான் வெளியிடும். அப்படியிருக்கும்போது, 13 உலகத் தலைவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட செய்தியை அரசு நினைத்தால் தணிக்கை செய்திருக்கமுடியும்.
ஆனால், ஈரான் அரசு அப்படிச் செய்யவில்லை. அப்படியானால், தணிக்கையாளர்களின் அனுமதியுடன்தான் அந்த மிரட்டல் செய்தி வெளியாகியுள்ளது என்பதால், அதை நாம் சீரியஸாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.
இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படை அல்லது ஈரான் உளவுத்துறைக்காக வேலை செய்யும் சுமார் 180 பேர் தற்போது ஜேர்மனியில் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளதால், அவர்கள், தனிநபருக்கு மிரட்டல் விடுப்பது முதல், தாக்குதல் நடத்துவது தொடர்பான உளவு பார்ப்பது வரையிலான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடும் என ஜேர்மன் உள்நாட்டு உளவுத்துறையே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |