கனடாவில் ரகசியமாக வசித்து வந்த ஈரான் அரசாங்கத்தின் இன்னொரு மூத்த அதிகாரி
ஈரான் அரசாங்கத்தின் இன்னொரு மூத்த அதிகாரி கனடாவில் ரகசியமாக வசித்து வந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
நாடுகடத்தல் விசாரணை
கனடாவில் ரகசியமாக வசித்து வந்து, இதுவரை அடையாளம் காணப்பட்ட மூத்த அதிகாரிகளின் எண்ணிக்கை இத்துடன் 16 என அதிகரித்துள்ளது. மட்டுமின்றி, இன்னொரு அதிகாரியை நாடுகடத்தல் தொடர்பான விசாரணைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் கனடா எல்லை சேவைகள் முகமை தெரிவித்துள்ளது.
தற்போது ஈரானிய மூத்த அதிகாரிகள் 7 பேர்கள் தொடர்பில் நாடுகடத்தல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவருக்கு நாடுகடத்தல் உத்தரவு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
தற்போது இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவில் கொலைகார ஈரானிய ஆட்சியின் தாக்கத்தை முறியடிப்பதற்கு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்றார்.
மேலும், நமது பொருளாதாரத்தையும் நமது நாட்டையும் சீர்குலைப்பதற்காகவும் கனேடிய குடும்பங்களை காயப்படுத்துவதற்காகவும் முடிவு செய்துள்ளவர்களுக்கு கனடா புகலிடம் அளிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த ஃபெடரல் ஏஜென்சிகள் செயல்பட்டு வருகின்றன என்றார்.
பொதுமக்களுக்கு வெளிப்படுத்த
இதனிடையே, அடையாளம் காணப்பட்டுள்ள ஈரானிய அதிகாரிகள் தொடர்பில் எந்த தகவலும் பொதுமக்களுக்கு வெளிப்படுத்த வாய்ப்பில்லை என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
மேலும், நவம்பர் 2022ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கொள்கையின் அடிப்படையிலேயே கனடாவில் இருந்து உயர் பதவியில் இருக்கும் ஈரானிய அரசாங்க அதிகாரிகளை தடை செய்வது என வழக்கு முன்னெடுக்கப்படுகிறது.
ஈரானின் சிறப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் மரணமடைந்த Mahsa Amini என்பவருக்காகவே கனடா இந்த கொள்கை முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |