ஈரானில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரான்ஸ் நாட்டவர்கள் விடுதலை: மேக்ரான் தகவல்
ஈரான் நாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரான்ஸ் நாட்டவர்கள் இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
30 ஆண்டுகள் சிறைத்தண்டனை
பிரான்ஸ் குடிமக்களான Cecile Kohler (41) மற்றும் Chuck Paris (72) என்னும் தம்பதியர் ஈரானுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், 2022ஆம் ஆண்டு ஈரான் அரசால் கைது செய்யப்பட்டார்கள்.

பிரான்ஸ் உளவுத்துறைக்காக வேலை பார்த்ததாகவும், இஸ்ரேல் நாட்டுடன் இணைந்து செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்ட அவர்களுக்கு ஆளுக்கு 30 ஆண்டுகளுக்கு மேல், அதாவது, இருவருக்குமாக மொத்தம் 63 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஈரான் நீதித்துறை தெரிவித்திருந்தது.
சமீபத்திய தகவல்
இந்நிலையில், அவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

விடயம் என்னவென்றால், பிரான்சில் வாழ்ந்துவந்த ஈரான் மாணவியான Mahdieh Esfandiari என்பவர் இஸ்ரேலுக்கெதிராக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியிட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
பிரான்சில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஈரான் நாட்டவர்களை விடுதலை செய்ய பிரான்சுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக ஈரான் பிரான்ஸ் நாட்டவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளதாக ஏற்கனவே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரான் மாணவியான Mahdieh Esfandiariஐ சென்ற மாதம் பிரான்ஸ் விடுவித்துள்ளது.

பதிலுக்கு ஈரானில் சிறையிலிருக்கும் பிரான்ஸ் நாட்டவர்களை ஈரான் விடுவிக்க இருப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது.
அதன்படி, நேற்று Cecile Kohler, Chuck Paris தம்பதியர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
அவர்கள் டெஹ்ரானிலுள்ள பிரெஞ்சு தூதரகத்தில் பாதுகாப்பாக இருப்பதாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Cecile Kohler, Chuck Paris தம்பதியர் விடுவிக்கப்பட்டுள்ளதை தான் வரவேற்பதாக தெரிவித்துள்ள மேக்ரான், அவர்கள் கூடிய விரைவில் பிரான்சுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவது தொடர்பில் பேச்சுவார்த்தை தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்.
ஈரான் பிடித்துவைத்திருந்த பிரான்ஸ் குடிமக்களில், Cecile Kohler, Chuck Paris தம்பதியர்தான் கடைசி இருவர் என கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |