ட்ரம்பைக் கொல்ல திட்டம் தீட்டிய ஈரானிய துணை ராணுவ குழு...அமெரிக்க நீதித்துறை வழக்கு
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக டொனால்டு ட்ரம்பை படுகொலை செய்ய திட்டமிட்டதாக கூறி ஈரானின் புரட்சிகர காவலர் துணை ராணுவ குழு உறுப்பினர் ஒருவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
ட்ரம்ப் ஆட்சியின் போது நெருக்கடி
அமெரிக்க நீதித்துறை இந்த விவகாரம் தொடர்பில் குற்றஞ்சாட்டியுள்ளது. தேர்தல் பரப்புரையின் போது இருமுறை டொனால்டு ட்ரம்ப் மீது தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது. அதில் ஒன்றில் ரத்த காயங்களுடன் ட்ரம்ப் உயிர் தப்பியிருந்தார்.
ஆனால் இந்த தாக்குதல் சம்பவங்களுக்கு பின்னணியில் ஈரான் இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் நம்பவில்லை என்றே கூறப்படுகிறது. அமெரிக்காவின் நீண்ட கால எதிரியாக இருந்து வரும் ஈரான், கடந்த முறை ட்ரம்ப் ஆட்சியின் போது நெருக்கடிகளை சந்தித்திருந்தது.
தற்போது வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில் மன்ஹாட்டன் ஃபெடரல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புகாரில், ஈரானின் துணை ராணுவ குழுவின் பெயரிடப்படாத அதிகாரி ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கண்காணிக்கவும் கொல்லவும்
இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை என அறியப்படும் ஈரானின் துணை ராணுவ குழுவின் ஒரு உறுப்பினர் ட்ரம்பைக் கண்காணிக்கவும் கொல்லவும் ஒரு திட்டத்தை உருவாக்க செப்டம்பர் மாதம் ஒருவருக்கு அறிவுறுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஈரானை வெளிப்படையாக விமர்சிக்கும் ஒரு அமெரிக்க பத்திரிகையாளரைக் கொல்ல ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாகக் கூறப்படும் இருவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக நீதித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |