ஒரு மணி நேரத்தில் ரூ. 10 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்: பங்குச்சந்தை கடும் சரிவு
வியாழக்கிழமை பங்குச் சந்தை தொடங்கிய சில நிமிடங்களிலேயே முதலீட்டாளர்களின் முதலீடுகள் கடும் சரிவை எதிர்கொண்டன.
ரூ. 10 லட்சம் கோடி
புதன்கிழமை வர்த்தக முடிவில், பிஎஸ்இ சென்செக்ஸ் நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ. 4,22,01,433.48 கோடியாக இருந்தது. வியாழக்கிழமை பகல் 10:03 மணி நிலவரப்படி, இது ரூ. 4,11,94,176 கோடியாகக் குறைந்தது.
அதாவது, ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் ரூ. 10 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த சமீபத்திய ஈரான் அச்சுறுத்தலைத் தொடர்ந்து எண்ணெய் விலைகள் உயர்ந்ததால், பிஎஸ்இ சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 ஆகிய இரண்டும் கடுமையாகச் சரிவுடன் தொடங்கின.
வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் 1,400 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. நிஃப்டி கிட்டத்தட்ட 2 சதவீதம் சரிந்து 22,300 புள்ளிகளுக்குக் கீழே வீழ்ச்சியடைந்தது.
மட்டுமின்றி, 16 முக்கியத் துறைசார் குறியீடுகளும் சரிவைச் சந்தித்தன. நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பங்குகள் சுமார் 1.6 சதவீதம் சரிந்தன.
ஈரான் மீதான மிரட்டல்
தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு பங்குகளில் கடும் சரிவு காணப்பட்டது. மருந்து மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை பங்குகள் கடும் அழுத்தத்தை சந்தித்தன.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பங்குகள் 3 சதவீதத்திற்கும் மேல் சரிவு. எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகியவை 1.5-2.5 சதவீதம் சரிந்தன.
லார்சன் & டூப்ரோ நிறுவனப் பங்குகள் 3 சதவீதத்திற்கும் மேல் சரிவு. அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எகனாமிக் ஸோன் மற்றும் அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 3 சதவீதத்திற்கும் மேல் சரிந்தன.
சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் கிட்டத்தட்ட 5 சதவீதம் சரிந்தது. பங்குச்சந்தைகள் சரிவிற்கு காரணம் ட்ரம்பின் ஈரான் மீதான மிரட்டல் மற்றும் எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட பல காரணங்களைக் குறிப்பிடுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |