2022 ஐபிஎல் தொடரில் மிரட்டப்போகும் 2 வீரர்கள் இவர்கள் தான் - இர்பான் பதான் கருத்து
2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் குறித்து முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2022 தொடருக்கான மெகா வீரர்கள் ஏலம் பெங்களூருவில் கடந்த பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு, ராஜஸ்தான், கொல்கத்தா, ஹைதராபாத், பஞ்சாப், குஜராத் , லக்னோ ஆகிய 10 அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு எடுத்தன. இதில் எதிர்பாராத சம்பவங்களும் நிகழ்ந்தது.
இதனிடையே முகேஷ் அம்பானியின் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களுக்கு தேவையான 25 வீரர்களை தேர்வு செய்தது. அதில் ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், பொல்லார்ட் ஆகிய 4 வீரர்களை ஏற்கனவே தக்க வைத்துக் கொண்டதால் எஞ்சிய 21 வீரர்களை இந்த ஏலத்தின் வாயிலாக அந்த அணி நிர்வாகம் வாங்கியது.
இதில் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு 2022 தொடரில் 100% பங்கேற்க மாட்டேன் என அறிவித்திருந்த இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சரை ரூ.8 கோடிக்கு அந்த அணி வாங்கியது. மும்பை அணியின் இந்த முடிவை முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் பாராட்டியுள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில் ஜொப்ரா ஆர்ச்சர் பெயர் வரும் வரை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் காத்திருந்து எடுத்தது மிகச்சிறந்த முடிவாகும் என்றும், தற்போது அவர் விளையாடாமல் போனால் கூட அடுத்த சீசனில் பும்ராவுடன் இணைந்து பந்து வீசுவார் எனவும் கூறியுள்ளார்.
மேலும் பும்ரா – ஆர்ச்சர் ஜோடி மும்பை அணியின் பந்துவீச்சில் மிரட்டலை விடுக்க கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களால் அந்த அணி கோப்பையை வெல்லாம் என்றும் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.