இந்திய அணியில் இன்னும் 7 வருஷம்.. நடராஜனுக்கு முக்கிய அறிவுரை தந்த மூத்த வீரர்
இந்தியாவின் புதிய இடது கை வேகப் பந்துவீச்சாளரான நடராஜன் அவரது எதிர்காலம் குறித்து அவர் எப்படி திட்டமிட வேண்டும் என முன்னாள் வீரர் இர்பான் பதான் அறிவுரை கூறி உள்ளார்.
அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்தியா கண்டறிந்த புதிய இடது கை வேகப் பந்துவீச்சாளர் தான் தமிழகத்தின் நடராஜன். ஒரே சுற்றுப்பயணத்தில் மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் அறிமுகம் ஆன ஒரே இந்திய வீரரும் அவர் தான்.
தற்போது நடராஜனுக்கு முக்கிய அறிவுரை அளித்துள்ளார் மூத்த வீரரான இர்பான் பதான்.
ஜாகிர் கானுக்கு பின் இந்திய அணியில் இடது கை வேகப் பந்துவீச்சாளராக சிறப்பாக ஆடியவர் இர்பான் பதான். அவருக்கு பின் இடது கை வேகப் பந்துவீச்சாளர்கள் அதிக அளவில் இந்திய அணியில் யாரும் தங்கள் முத்திரையை பதிக்கவும் இல்லை.
இர்பான் பதான் கூறுகையில், நடராஜன் டெஸ்ட் போட்டிகளில் நிறைய மாற்றங்கள் கொண்டுவர வேண்டும்.
அவரது ஆங்கிள், ரிதம் ஆகியவற்றை அவர் சரி செய்ய வேண்டும். அவரிடம் தொடர்ந்து ஒரே மாதிரி பந்து வீசும் திறன் உள்ளது.
அவர் தன் உடலை பந்துக்கு பின் கொண்டு செல்ல வேண்டும், அப்போது தான் பந்தை துடுப்பாட்ட வீரருக்கு மிக அருகே கொண்டு செல்ல முடியும் என்றார்.
மேலும், அவரது முதன்மை திட்டம் நாட்டுக்காக ஐந்து முதல் ஏழு வருடங்கள் வரை ஆட வேண்டும் என்பதாக இருக்க வேண்டும். அதற்காக அவர் தன் உடற்தகுதி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். அவர் தன்னிடம் உள்ள திறமைகளை கொண்டே இதை செய்யலாம்.
போட்டிகளில் ஆட ஆட அவர் இன்னும் நிறைய கற்றுக் கொள்வார் என்றார் பதான்.