மாற்றுப்பாதையில் பிரான்சுக்குள் நுழையத் தொடங்கியுள்ள அயர்லாந்து ட்ரக்குகள்: கட்டுப்படுத்த பிரான்ஸ் முடிவு
பிரெக்சிட்டைத் தொடர்ந்து, வழக்கமாக பிரித்தானியா வழியாக பிரான்சுக்குள் நுழையும் அயர்லாந்து நாட்டு ட்ரக்குகள், இப்போது வேறு வழியாக பிரான்சுக்குள் நுழையத் தொடங்கியுள்ளன.
அதாவது பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிவிட்டதால், பிரித்தானியா வழியாக பயணிப்பதால் ஆவணங்கள் சோதனை முதலான பிரச்சினைகள் தாமதத்தை ஏற்படுத்தும் என்பதால், அவை மாற்றுப்பாதையில் பயணிக்கத்தொடங்கியுள்ளன.
ஆனால், பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய திடீர்மாற்றம் பெற்ற வகை கொரோனா வைரஸ் அயர்லாந்திலும் பரவியுள்ளதைத் தொடர்ந்து, அயர்லாந்திலிருந்து வரும் ட்ரக் சாரதிகளால் பிரச்சினை ஏற்படக்கூடும் என பிரான்ஸ் கருதுகிறது.
ஆகவே, அயர்லாந்திலிருந்து வரும் ட்ரக்குகளின் சாரதிகள் பி.சி.ஆர் முறையில் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகளைக் கொண்டுவரவேண்டும் என பிரான்ஸ் விரும்புவதாக பிரான்ஸ் போக்குவரத்துத்துறை அமைச்சர் Eamon Ryan தெரிவித்துள்ளார்.
அயர்லாந்தும், தன் நாட்டுக்குள் வரும் அனைத்து பயணிகளும் பி.சி.ஆர் முறையில் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகளைக் கொண்டுவரவேண்டும் என்றே கேட்கிறது.
ஏற்கனவே டிசம்பரில் பி.சி.ஆர் முறையில் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகளைக் கொண்டுவரவேண்டும் என பிரான்ஸ் பிரித்தானிய சாரதிகளை கோரியதால் ஏற்பட்ட தாமதத்தால், துறைமுகங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிட்டது நினைவிருக்கலாம்.
ஐரோப்பிய ஒன்றியமல்லாத நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பி.சி.ஆர் முறையில் கொரோனா பரிசோதனை செய்து தங்களுக்கு கொரோனா இல்லை என்பதைக் காட்டும் ஆவணத்தைக் கொண்டுவரவேண்டும் என கடந்த வெள்ளிக்கிழமையன்று பிரான்ஸ் அறிவித்துள்ளது.
ஆனால், பிரித்தானிய ட்ரக் சாரதிகளுக்கு ஆன்டிஜன் பரிசோதனை முடிவுகள் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அயர்லாந்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடு என்றாலும், அது Schengen தடையில்லா போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ள நாடு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.