நிர்மலா சீதாராமனிடம் கைகூப்பி மன்னிப்பு கேட்ட அன்னபூர்ணா ஹொட்டல் உரிமையாளர்? நடந்தது என்ன
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமானிடம் அன்னபூர்ணா ஹொட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்கும்படியான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
என்ன விவகாரம்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கடி பல்வேறு தொழிலதிபர்களுடன் ஆலோசனைகளை மேற்கொள்வார். அப்போது, வரிவிதிப்பு பிரச்சனைகள் குறித்து விவாதம் செய்யப்படும்.
அந்தவகையில் கோவை கொடிசியாவில் வைத்து ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அன்னப்பூர்ணா குழுமத்தின் உரிமையாளரும், நிர்வாக இயக்குநருமான சீனிவாசன் பேசியது சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.
அப்போது பேசிய அவர், "காரத்திற்கும் இனிப்பிற்கும் வெவ்வேறு ஜிஎஸ்டி உள்ளது. இனிப்பிற் 5 சதவீத ஜிஎஸ்டி, காரத்திற்கு 12 சதவீத வரி இருக்கிறது.
பன்னுக்கு ஜிஎஸ்டி வரி இல்லை. ஆனால், அதில் க்ரீம் வைத்தால் 18 சதவீத ஜிஎஸ்டி வரி ஆகிவிடுகிறது. இதனால் கம்ப்யூட்டரே திணறுகிறது" என்றார்.
இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், "ஹொட்டல் உரிமையாளர் தன்னுடைய பிரச்சனையை ஜனரஞ்சகமாக பேசியிருந்தார். அதில் தவறில்லை.
அவர் தன்னுடைய ஸ்டைலில் பேசியிருக்கிறார். ஒவ்வொரு உணவுக்கும் எவ்வளவு வரி விதிக்க வேண்டும் என்பது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் ஆய்வு செய்து வருகிறது. உங்கள் கோரிக்கைபரிசீலனை செய்யப்படும்" என்றார்.
மன்னிப்பு கேட்டாரா?
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமானிடம் அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் மன்னிப்பு கோரியதாக கூறப்படும் வீடியோ பரவி வருகிறது.
அந்த வீடியோவில், அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமான், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் உள்ளனர்.
அப்போது அவர், நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை. தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கைகூப்பி கேட்கும் காட்சிகள் வீடியோவில் உள்ளன. ஆனாலும் வீடியோவில் ஆடியோ சரியாக கேட்கவில்லை.
மேலும், இந்த வீடியோ குறித்து அன்னபூர்ணா குழுமம் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |