இளவரசி டயானாவின் சிலை இந்த புகைப்படத்தின் அடிப்படையில்தான் தயாரிக்கப்பட்டதாம்... சில துல்லியமான விவரங்கள்
இளவரசி டயானாவின் 60ஆவது பிறந்தநாளையொட்டி அவரை கௌரவிக்கும் வகையில், இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரி, அவரது உருவச் சிலையை கென்சிங்டன் மாளிகையில் திறந்துவைத்தார்கள்.
முன்புறம் இருந்து பார்க்கும்போது இளவரசி டயானா இரண்டு குழந்தைகளுடன் நிற்பதுபோல அந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. 1992ஆம் ஆண்டு, இளவரசர் சார்லஸும் இளவரசி டயானாவும் பிரிந்ததைத் தொடர்ந்து, முதன்முறையாக இருவரும் தனித்தனியே கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளை வெளியிட்டிருந்தனர்.
1993ஆம் ஆண்டு இளவரசி டயானா வடிவமைத்திருந்த வாழ்த்து அட்டையில், இளநீல நிற சட்டையும், மார்பருகே தடிமனான பெல்ட்டும், ஸ்கர்ட்டும் அணிந்திருந்த டயானா, இளவரசர் வில்லியமை அன்புடன் பார்ப்பது போலவும், இளவரசர் ஹரி தாயை அன்புடன் பார்ப்பது போலவும் இருக்கும் புகைப்படம் பயன்படுத்தப்பட்டிருந்தது.
இந்த வாழ்த்து அட்டையில் அவர் அணிந்திருந்த அதே சட்டை, பெட்ல் மற்றும் ஸ்கர்ட்தான் இந்த சிலையிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பல புகைப்படங்களில் டயானா இதே போன்ற உடையை அணிந்திருப்பதைக் காணலாம். ஆனால், புகைப்படத்தில் டயானாவின் அருகே அவரது மகன்கள் இருக்கும் நிலையில், இப்போது திறந்துவைக்கப்பட்டுள்ள சிலையை அருகே சென்று கவனித்தால், டயானாவுக்கு அருகே இரண்டு பேர் அல்ல, மூன்று பிள்ளைகள் நிற்பதைக் காணலாம்.
டயானாவின் ஒரு பக்கம் ஒரு சிறுவனும், மறுபக்கம் ஒரு சிறுமியும் நிற்க, அவர்களுக்குப் பின்னாலும் ஒரு சிறுவன் நிற்பதைக் காணமுடிகிறது. அவர்களில் இருவர் கால்களில் செருப்பு கூட இல்லை.
ஆக, அவர்கள் ஹரியும் வில்லியமும் அல்ல என்பது தெளிவாகிறது. அதாவது, சர்வதேச அளவில் டயானாவின் தொண்டு நிறுவனப் பணிகள் ஏராளமானோர் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைக் காட்டும் வகையில், அவர் சிறுவர்களுடன் நிற்பதுபோல அந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.