சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்படுமா?: சட்டம் என்ன சொல்கிறது?
சுவிட்சர்லாந்தில் கொரோனா நிலைமை மோசமாகிக்கொண்டு வரும் நிலையில், கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2020 இறுதிவாக்கில் கொரோனா தடுப்பூசி குறித்த பிரச்சாரம் தொடங்கியபோதே, கொரோனா தடுப்பூசி பெறுவது மக்களுடைய விருப்பத்தைப் பொருத்ததே என்று சுவிஸ் அரசு கூறியிருந்தது.
சுவிஸ் சுகாதாரத்துறை அமைச்சரான Alain Bersetம், சுவிட்சர்லாந்தில் ஒருவருக்கும் அவர்களது விருப்பத்துக்கு மாறாக தடுப்பூசி அளிக்கப்படாது என் திரும்பத் திரும்ப கூறிவந்தார்.
ஆனால், அடுத்து சுவிஸ் ஜனாதிபதியாக பொறுப்பேற்க இருக்கும் Ignazio Cassis, கடைசி நடவடிக்கையாக, நாடு முழுவதும் தடுப்பூசி கட்டாயமாக்கல் என்பதை ஒட்டுமொத்தமாக ஒதுக்கித் தள்ளிவிடவிரும்பவில்லை என்று கூறியிருக்கிறார்.
கட்டாய தடுப்பூசி திட்டம் பயனுள்ளதாக இருக்கலாம் என்று கூறிய அவர், ஆனால், அதனால் தனி நபர் சுதந்திரம் பெருமளவில் பாதிக்கப்படலாம் என்றும் எச்சரித்தார்.
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, கொரோனா தடுப்பூசியைக் கட்டாயமாக்குவது எளிதல்ல!
ஏனென்றால், கலாச்சாரக் கண்ணோட்டத்தின்படி பார்த்தால், சுவிஸ் மக்கள் தங்கள் தனிமனித உரிமைகளை பெரிதும் முக்கியமானவையாக மதிக்கிறார்கள். தங்கள் சம்பந்தப்பட்ட விடயங்களை தாங்களே முடிவு செய்யும் உரிமை அவர்களது அரசியல் சாசன உரிமையிலேயே உள்ளது.
அதே நேரத்தில் நாட்டில் கொரோனா நிலைமை மோசமாகிக்கொண்டே சென்றால் என்ன செய்வது? மருத்துவமனைகள் பெரும்பாலும் தடுப்பூசி பெறாத கொரோனா நோயாளிகளால் நிரம்பி, அவர்களை மருத்துவமனைகள் சமாளிக்கத் தடுமாறும் ஒரு நிலை உருவானால் என்ன செய்வது?
அந்தக் கேள்விக்கான விடை சற்று குழப்பமானதுதான். ஆனால், சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களின் கீழ், கட்டாய தடுப்பூசி வழங்க சட்டப்படி சில வழிமுறைகள் உள்ளதாகவே தோன்றுகிறது.
அரசியல் சாசனத்தின்படி கட்டாய தடுப்பூசி பல அடிப்படை உரிமைகளை பாதிக்கும் என்கிறார் சூரிச் பல்கலைக்கழக சட்டத்துறை பேரசிரியரான Dr. Nicole Vögeli Galli.
அதே நேரத்தில், ’பொது நலன் கருதி’, அடிப்படை உரிமைகளில் தலையிடுவதற்கு அனுமதி உள்ளது. ஆனால், அவ்வகையில் மேற்கொள்ளப்படும் கட்டுப்பாடுகள் சட்டத்திலேயே கொடுக்கப்பட்ட கட்டுப்பாடுகளாக இருக்கவேண்டும்.
பொது சுகாதாரம், எளிதில் பாதிப்புக்குள்ளாகக்கூடியவர்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டில் சுகாதார நிலைமை சரியாக செயல்படுவதை உறுதி செய்தல் ஆகிய விடயங்கள் ’பொது நலனாக’ கருதப்படலாம் என்கிறார் Dr. Nicole Vögeli Galli.
மேலும், ஏற்கனவே, கொரோனாவுடன் சம்பந்தம் இல்லாத ஒரு சந்தர்ப்பத்தில், கட்டாய தடுப்பூசி வழங்க அனுமதியளிப்பதற்கு ஆதரவாக சுவிஸ் பெடரல் நீதிமன்றமும் தன் நிலையை உறுதிபடுத்தியுள்ளது.
அத்துடன், தொற்றுநோயியல் சட்டத்தின்படியும், மாகாணங்களைக் கலந்தாலோசித்தபின், பெடரல் கவுன்சிலும், மாகாணங்களும், எளிதில் நோய் தொற்றும் அபாயத்திலுள்ள குழுவினருக்கு தடுப்பூசியைக் கட்டாயமாக்கலாம்.
தற்போதுள்ள கட்டுப்பாடுகள், கொரோனா பரவலால் மருத்துவ அமைப்பு அதிக அழுத்தத்திற்குள்ளாக்கப்படுவதை தடுக்கமுடியாத பட்சத்தில், கடைசி நடவடிக்கையாக பெடரல் கவுன்சில் தடுப்பூசியைக் கட்டாயமாக்கும் முடிவை எடுக்கலாம்.
ஆனாலும், தடுப்பூசி கட்டாயம் என அறிவிக்கப்படாலும், அது குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மட்டுமே அமுலில் இருக்கும், அத்துடன், அப்போதும் யாரையும் பிடித்து வந்து கட்டயாமாக தடுப்பூசி போட முடியாது. மேலும், தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்ட நிலையிலும், தடுப்பூசி பெற மறுப்பவர்கள் மீது அரசு எந்த தடையும் விதிக்கவும் சட்டத்தில் இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.