நெய் உடல் நலத்துக்கு நல்லதா கெட்டதா?
நெய் என்றாலே, ஐயோ கொலஸ்ட்ரால் என்று ஓடுபவர்களும் இருக்கிறார்கள், தினமும் உணவில் ஒரு ஸ்பூன் நெய்யாவது சேர்த்துக்கொள்பவர்களும் இருக்கிறார்கள்.
ஆக, நெய் உடல் நலத்துக்கு நல்லதா கெட்டதா?
எந்த உணவுப்பொருளுமே உண்ணும் நபரின் உடல் நிலையையும் உண்ணும் அளவையும் பொருத்தது. சில உணவுப்பொருட்கள் சிலருக்கு நன்மை பயக்கும் அதே நேரத்தில், அதே உணவு வேறொருவரின் உடல் நலனுக்கு ஒவ்வாததாகவும் இருக்கமுடியும்.
நெய் உடல் நலத்துக்கு நல்லதா கெட்டதா?
நெய்யினால் உடல் நலனுக்கு ஏற்படும் நன்மைகளை முதலில் பார்க்கலாம்.
வெண்ணெய், குறைவான வெப்பத்தில் சூடாக்கப்பட்டு நெய் தயாரிக்கப்படுவதால், நெய்யில் பெரும்பாலான ஊட்டச்சத்துக்கள் அப்படியே இருக்கும்.
ஆயுர்வேத மருத்துவத்தில் மூலிகைகளுடன் நெய்யையும் சேர்க்கும் ஒரு வழக்கம் பல நூற்றாண்டுகளாக உள்ளது.
விட்டமின் E
நெய்யில் விட்டமின் E உள்ளது, இந்த விட்டமின் E, antioxidant குணங்கள் கொண்டது. விட்டமின் E போன்ற antioxidantகள், புற்றுநோய், ஆர்த்ரைட்டிஸ், கண்புரை ஆகிய பிரச்சினைகளை குறைக்கும் தன்மை கொண்டதுடன், மாரடைப்பையும் குறைக்கும் திறன்கொண்டவையாகும்.
உடல் எடையைக் குறைக்க உதவும்
நெய்யில் conjugated linoleic acid என்னும் பொருள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. இது உடல் எடையையும், சிலருக்கு, கொழுப்பையும் குறைக்கக்கூடியது என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இதயத்தை ஆதரிக்கும்
பொதுவாக நெய்யில் அதிக அளவில் கொழுப்பு உள்ளது என்றாலும், அதில் Omega-3s என்னும் கொழுப்பு அமிலமும் உள்ளது. நோயற்ற இதயத்தை இது ஆதரிக்கக்கூடியாதாகும். சொல்லப்போனால், சமச்சீர் உணவுடன் சேர்த்துக்கொள்ளப்படும் நெய், கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கக்கூடும் என ஆய்வுகள் காட்டுகின்றன.
பால் பொருட்களுக்கு நல்ல மாற்றுப்பொருள்
நெய், பாலில் உள்ள திடப்பொருட்களை அகற்றுவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. ஆகவே, அதில் குறைந்த அளவே லாக்டோஸ் மற்றும் கேசின் ஆகிய பொருட்கள் உள்ளன. பால் ஒவ்வாமை அல்லது லாக்டோஸ் எடுத்துக்கொள்ள இயலாதவர்கள் நெய்யை எடுத்துக்கொள்ளலாம்.
அதே நேரத்தில், நெய்யில் சில பிரச்சினைகளும் உள்ளதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.
ஆம், முன்பே சொன்னதுபோல் நெய்யில் அதிக அளவில் கொழுப்பு உள்ளதால், சமச்சீர் உணவின் ஒரு பாகமாகத்தான் அதை எடுத்துக்கொள்ளவேண்டும். அத்துடன், நெய் உங்களுக்கு நன்மை பயக்குமா என்பது குறித்து உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது நல்லது.
உணவில் நெய்யை சேர்க்கும்போது, கீழ்க்கண்ட விடயங்களை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்:
இதய பிரச்சினை
சரியான அளவில் நெய்யை உணவில் சேர்த்துக்கொள்வது இதயப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும் என்பது உண்மைதான் என்றாலும், அதிக அளவிலான பூரிதக் கொழுப்பு என அழைக்கப்படும் saturated கொழுப்புக்கள், இதய நோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடும். ஆகவே, இதயப் பிரச்சினைக்கான பிற அபாயங்கள் உடையவர்கள் தங்கள் உணவில் நெய்யை அறிமுகப்படுத்தும்போது கவனமாக இருப்பது நல்லது.
உடல் எடை அதிகரித்தல்
நெய்யில் உள்ள conjugated linoleic acid என்னும் பொருள், சிலருடைய உடல் எடையைக் குறைப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது என்றாலும், அது கலோரி அதிகமான, கொழுப்பு நிறைந்த ஒரு உணவுப்பொருளாகும். ஆகவே, அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதுபோல, அதிக அளவில் நெய்யை உணவில் சேர்த்துக்கொள்வதால், உடல் எடை அதிகரிப்பதுடன் உடல் பருமனாகும் அபாயம் உள்ளதையும் நினைவில் கொள்வது நல்லது.