சீமானின் ஆண்டு வருமானம் வெறும் ஆயிரமா? உண்மையை தெளிவுப்படுத்திய நாம் தமிழர் கட்சியினர்!
திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட சீமான் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தவறான தகவல் அளித்ததால், அவர் 2வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்வுள்ளதாக நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் வேட்பு மனுவில் சொத்து மதிப்பு, குற்றப் பின்னணி, நிலுவையில் உள்ள கடன் போன்ற விவரங்கள் உள்ளடங்கிய பிரமாணப் பத்திரத்தை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் சீமான் 15ம் திகதி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
சீமான் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், 2019-20ம் ஆண்டிற்கான வருமான வரி கணக்கில் காட்டப்பட்ட மொத்த வருமானம் ரூ.1000 என குறிப்பிடப்பட்டுள்ளது.
சீமான் ஆண்டு வருமானம் வெறும் ரூ.1000 என குறிப்பிட்டதாக செய்திகளில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், சீமானின் ஆண்டு வருமானம் 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் எனவும், ரூ.1,000 என்பது எழுத்துப் பிழையாக தாக்கல் செய்யப்பட்டதால், அதை சரி செய்யும் விதமாக மீண்டும் சீமான் வேட்பு மனுவை தாக்கல் செய்வார் என்றும் நாம் தமிழர் கட்சியினர் விளக்கமளித்துள்ளனர்.