பாலைவனமாகும் சுவிட்சர்லாந்து?: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்...
சுவிட்சர்லாந்து என்றாலே, நம் மனதில் முதலில் தோன்றுவது பனி படர்ந்த ஆல்ப்ஸ் மலைகள்தான். சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு விளையாடும் காட்சிகளை பல திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம்.
ஆனால், இன்றைய நிலைமை அப்படியில்லை...
பாலைவனமாகும் சுவிட்சர்லாந்து?
சமீபத்தில் சுவிஸ் மாகாணங்கள் சிலவற்றில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், சுவிட்சர்லாந்து பாலைவனமாகிறதா என அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
ஆம், சுவிட்சர்லாந்தின் Valais, Ticino மற்றும் Grisons மாகாணங்களில், பொதுவாக பாலைவனங்களில் காணப்படுபவை என கருதப்படும் சப்பாத்திக்கள்ளித் தாவரங்கள் வேகமாக பரவி வருவதை அந்த புகைப்படங்கள் காட்டுகின்றன.
உண்மையில் சொல்லப்போனால், சில சப்பாத்திக்கள்ளித் தாவரங்களால் குளிர் பிரதேசங்களில் வளர முடியும் என்றாலும், சுவிட்சர்லாந்தில் சப்பாத்திக்கள்ளி வளர்ந்து பாலைவனம்போல் காட்சியளிப்பதை கற்பனைகூட செய்துபார்க்கமுடியவில்லை.
அத்துடன், தற்போது சுவிட்சர்லாந்தில் வளரும் சப்பாத்திக்கள்ளி, வறட்சியான, வெப்பமான பருவநிலையில் வளரும் Opuntia என்னும் வகை சப்பாத்திக்கள்ளிதான் என்பதை அறிவியலாளர்கள் உறுதி செய்துள்ளார்கள்.
குளிர்ச்சியான சுவிட்சர்லாந்தில் சப்பாத்திக்கள்ளி வளர்வது ஏன்?
இதற்கெல்லாம் புவி வெப்பமயமாதல்தான் காரணம். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், சிறுபெண் கிரேட்டா தன்பெர்க் முதல், சமீபத்தில் ஜேர்மனியில் நிலக்கரி சுரங்கம் தோண்ட எதிர்ப்பு தெரிவித்துப் போராடிய கிராம மக்கள், பிரித்தானியாவில் சாலையுடன் சேர்த்து தங்களை பசைபோட்டு ஒட்டிக்கொள்பவர்கள் வரை சுற்றுச்சூழலை பாதுகாக்கவேண்டும், புவி வெப்பமயமாதலைத் தடுக்கவேண்டும் என போராடும்போதெல்லாம், அவர்கள் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடைஞ்சலாக இருப்பதாக அவர்கள் மீது எரிச்சல் காட்டுவதும், அவர்களைக் கைது செய்து தூக்கிச் செல்வதுமாக அவர்களைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கங்களும், ஊடகங்களில் வரும் செய்திகளை விமர்சிப்பதில் பொதுமக்களும் ஆர்வம் காட்டினார்களேயொழிய, அவர்கள் கோரிக்கைக்கு யாரும் செவிமடுத்ததாகத் தெரியவில்லை.
Photograph: pob/Peter Oliver Baumgartner
அரசியல்வாதிகள் குளிரூட்டப்பட்ட அரங்குகளில் உட்கார்ந்து பருவநிலை மாற்ற உச்சி மாநாடுகள் நடத்திவிட்டு அரசியல் செய்யப்போய்விட்டார்கள்.
விளைவு, மனித இனம் பூமித்தாயின் கோபத்துக்கு ஆளாகத்துவங்கியுள்ளது. தன் வயிற்றில் அடிக்கும் மக்களின் வயிற்றில் அடிக்கத் துவங்கிவிட்டாள் பூமித்தாய். ஆம், குளிர்காலத்தில் கொட்டும் பனியை வைத்து சுற்றுலா, பனிச்சறுக்கு என பணம் பார்த்த நாடுகள், சுவிட்சர்லாந்து முதல் பிரான்ஸ் வரை, பனியைக் காணாமல், பனிச்சறுக்கு விளையாட்டுக்கு ஆள் இல்லாமல், சுற்றுலாவால் வரும் வருவாயை இழக்கத் துவங்கிவிட்டன.
இன்று, பனிபடர்ந்த நாடு என்று கூறப்படும் சுவிட்சர்லாந்தில், பாலைவனத்தாவரமான சப்பாத்திக்கள்ளி வேகமாகப் பரவ, அதை எப்படி ஒழித்துக்கட்டுவது என யோசனை செய்துகொண்டிருக்கிறார்கள் அரசியல்வாதிகள்!