கொரோனா கட்டுப்பாடுகளிலிருந்து தப்ப வழியே இல்லையா: பிரித்தானியா அறிவியலாளர்களின் கருத்து என்ன?
பிரித்தானியாவில் பொதுமுடக்கத்தை தளர்த்துவது தொடர்பான திட்டங்கள் பிரதமர் இல்லத்தில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், சமூக விலகல் மற்றும் மாஸ்க் அணிதல் போன்ற கொரோனா கட்டுப்பாடுகள் இலையுதிர்காலம் வரையிலாவது அமுலில் இருக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரதமர் இல்ல அறிவியல் ஆலோசகர்கள், நாளொன்றிற்கு 1,000 பேருக்கு குறைவானோருக்கு மட்டுமே கொரோனா தொற்று என்ற ஒரு சூழ்நிலை உருவாகும் முன் கொரோனா விதிகள் தளர்த்தப்படுமானால், புதிய திடீர் மாற்றம் பெற்ற வைரஸ்கள் உருவாகும் அபாயம் நாட்டுக்கு உள்ளதாக எச்சரித்துள்ளார்கள்.
அப்படி ஒரு சூழ்நிலை வரவேண்டுமானால், அதாவது நாளொன்றிற்கு 1,000க்கு குறைவானோருக்கு மட்டுமே கொரோனா தொற்று புதிதாக உருவாகும் ஒரு நிலை வரவேண்டுமானால், இப்போதிருக்கும் நிலைமையைவிட 15 மடங்கு கொரோனா தொற்று குறையவேண்டும், காரணம், இப்போது நாளொன்றிற்கு புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோரின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை 15,000 ஆகும்.
மக்கள் தொடர்ந்து சமூக விலகல் மற்றும் மாஸ்க் அணிதல் போன்ற விதிகளை பின்பற்றுவார்கள் என்ற நம்பிக்கையில்தான் பிரதமர் பொதுமுடக்க விதிகளை நெகிழ்த்த உள்ளார்.
ஆனால், கொரோனா கட்டுப்பாடுகள் இந்த ஆண்டு இறுதிவரையாவது அமுலில் இருக்கவேண்டும் என நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளார்கள்.
இப்படி கட்டுப்பாடுகள் நீண்ட காலம் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படும் இந்த சூழ்நிலையிலும், சமூக விலகல் மற்றும் மாஸ்க் அணிதல் போன்ற சில கட்டுப்பாடுகளை தொடர்ந்து அமுலில் வைத்திருப்பது மற்ற சில கட்டுப்பாடுகளை நெகிழ்த்த உதவும் என அரசு நம்புகிறது.
அரசின் அறிவியல் ஆலோசகர்களோ, இந்த கொரோனா, சின்னம்மை, மலேரியா போன்று எப்போதும் இருக்கும் ஒரு நோயாக மாறிவிட வாய்ப்புள்ளது என்பதால், ஒரு நேரத்தில் ஆறு பேர் மட்டுமே ஓரிடத்தில் கூடுதல், மாஸ்க் அணிதல் ஆகிய கட்டுப்பாடுகள் காலாகாலத்துக்கும் பின்பற்றப்படவேண்டியதுதான் என்கிறார்கள்.

