நோயுடன் போராடும் நடிகர் போண்டா மணி! மகள் பெற்ற மதிப்பெண்- உருக்கமாக பேசியது என்ன?
நடிகர் போண்டா மணியின் மகள் 12ம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி அடைந்ததை தொடர்ந்து, அவரது மேற்படிப்பு செலவு முழுவதும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஏற்றுக் கொண்டுள்ளார்.
நடிகர் போண்டா மணிக்கு உதவிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்
பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக தோன்றிய போண்டா மணி, சமீபத்தில் இரண்டு கிட்னியும் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் வாரம் இருமுறை டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
தன்னுடைய இத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும், குடும்ப நிலைமை காரணமாக அவ்வப்போது சில படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் போண்டா மணியின் மகள் சமீபத்தில் 12ம் வகுப்பு பொது தேர்வில் 600க்கு 400 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற நிலையில், அவருடைய மேற்படிப்புக்கு என்ன செய்வது என்று தவித்து வந்துள்ளார்.
ஆனால் நடிகர் போண்டா மணியின் குடும்ப சூழ்நிலையை முற்றிலுமாக அறிந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகர் போண்டா மணியின் மகள் சாய் குமாரியின் மேற்படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுக் கொண்டுள்ளார்.
அத்துடன் தன்னுடைய வேல்ஸ் கல்லூரியிலேயே சாய் குமாரி-க்கு பி.சி.ஏ படிக்க சீட் வழங்கியுள்ளார்.
Photo: http://www.velsuniv.ac.in
உருகிய நடிகர் போண்டா மணி
இந்நிலையில், இது குறித்து நடிகர் போண்டா மணி பேசிய போது, நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், நான் பட்ட கஷ்டத்துக்கு பரிசாக என்னுடைய மகள் 12 வகுப்பில் 400 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி அடைந்து விட்டார்.
அடுத்து மேற்படிப்புக்கு கல்லூரியில் சேர்க்க என்ன செய்வது என்று வேதனையாக இருந்தேன், ஆனால் என் நிலையை அறிந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவர்கள், நான் உடல்நிலை குன்றி இருந்த போது என்னுடைய மகள் 12ம் வகுப்பில் தேர்ச்சி அடைந்தால், அவளது முழு மேற்படிப்பு செலவையும் ஏற்றுக் கொள்வதாக உறுதி அளித்து இருந்தார்.
அந்த வாக்குறுதி படியே தற்போது என்னுடைய மகள் தேர்ச்சி அடைந்ததை தொடர்ந்து, முழு மேற்படிப்பு செலவையும் அவரே ஏற்றுக் கொண்டுள்ளார், அத்துடன் அவருடைய வேல்ஸ் கல்லூரியிலேயே 1 ரூபாய் கூட கட்டணம் வாங்காமல் என் மகள் பி.சி.ஏ படிக்க சீட் கொடுத்துள்ளார்.
இப்படிப்பட்ட மனிதர் தெய்வத்திற்கு சமம், இது என்னுடைய உழைப்புக்கு கிடைத்த வெற்றி, நான் என்றும் அவருக்கு நன்றி கடன்பட்டிருக்கிறேன் என மனம் நெகிழ தெரிவித்துள்ளார்.