இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் சாதனைப் படைத்த இஷான் கிஷன்
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இஷான் கிஷன் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நேற்று நடந்த இந்தியா- இலங்கை அணிகள் இடையேயான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் 89 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 10 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களையும் விளாசியிருந்தார்.
கடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சொதப்பிய இஷான் கிஷனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் தற்போது அசத்தியுள்ளார்.
இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் அடித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையை இஷான் கிஷன் படைத்தார். இதற்கு முன் ரிஷப் பண்ட் 65 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.
மேலும் தோனி 85 இன்னிங்ஸ் விளையாடி 2 முறை தான் அரைசதம் அடித்தார். ஆனால் இஷான் கிஷன் 9 இன்னிங்சில் 2 முறை அரைசதம் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.