தலையில் தாக்கிய பந்து.. இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியிலிருந்து இஷான் கிஷன் விலகல்!
இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியிலிருந்து இந்திய இளம் நட்சத்திரம் இஷான் கிஷன் விலகியுள்ளார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
டி20 தொடரை தொடர்ந்து இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கின்றன.
முதல் 2 டி20 போட்டியிலும் வெற்றிப்பெற்று இந்திய அணி தொடைரை கைப்பற்றியுள்ள நிலையில், இரு அணிகளும் மோதும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று தர்மசாலாவில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், 3வது டி20 போட்டியிலிருந்து இந்திய இளம் நட்சத்திரம் இஷான் கிஷன் விலகியுள்ளார் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், தர்மசாலாவில் சனிக்கிழமை நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் பேட்டிங் செய்யும் போது பந்து தலையில் தாக்கியது.
அணி மருத்துவர்களுடன், நேற்று இரவு உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு இஷான் கிஷனுக்கு CT ஸ்கேன் செய்யப்பட்டது. CT ஸ்கேனில் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.
அவரது மூளையதிர்ச்சி அறிகுறிகளை பிசிசிஐ மருத்துவக் குழு தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.
இலங்கைக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இருந்து இஷான் விலகியுள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
NEWS - Ishan Kishan ruled out of 3rd T20I.
— BCCI (@BCCI) February 27, 2022
More details here - https://t.co/QVWZ4CFCv5 @Paytm #INDvSL pic.twitter.com/CN1a2GVLQa