தலைக்கு 5 மில்லியன் டொலர்கள் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த ஐ எஸ் தலைவன்: பிரான்ஸ் ஜனாதிபதி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
ஐ.எஸ் தலைவன் ஒருவனது தலைக்கு 5 மில்லியன் டொலர்கள் பரிசு என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பிரான்ஸ் படையினர் அவனை கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனது 40 வயதுகளிலிருக்கும் Adnan Abou Walid al Sahraoui என்னும் ஐ.எஸ் தீவிரவாதி திட்டமிட்ட தாக்குதல் ஒன்றில், 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நான்கு அமெரிக்க வீரர்களும் நான்கு நைஜீரிய வீரர்களும் கொல்லப்பட்டனர். இரண்டு அமெரிக்க வீரர்களும், எட்டு நைஜீரிய வீரர்களும் படுகாயமடைந்தனர்.
2019ஆம் ஆண்டு, Al-Sahraouiயைக் கைது செய்வதற்கு உதவும் வகையில் துப்புக்கொடுப்பவர்கள் அல்லது கொல்பவர்களுக்கு 5 மில்லியன் டொலர்கள் வரை பரிசு வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்தது.
இந்நிலையில், தற்போது Al-Sahraouiயை ஆப்பிரிக்காவில் வைத்து பிரான்ஸ் படையினர் கொன்றுவிட்டதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் ட்வீட் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இது Sahelஇல் உள்ள தீவிரவாத குழுக்களுக்கெதிரான மிகப்பெரிய வெற்றி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்பிரிக்காவிலுள்ள பாலைவனப்பகுதியான Sahel என்ற இடத்தை மையமாகக் கொண்டுதான் ஐ.எஸ் மற்றும் அல் கொய்தா அமைப்பினர் இயங்குகின்றனர்.
மொராக்கோவில் பிறந்தவனான Al-Sahraoui, 2020ஆம் ஆண்டு, ஆகத்து மாதம், பிரான்ஸ் நாட்டவர்களான ஆறு மருத்துவ உதவிக்குழுவினர், அவர்களது வழிகாட்டியாக செயல்பட்ட உள்ளூர் நபர் ஒருவர் மற்றும் அவர்களது சாரதியைக் கொல்ல தானே தனிப்பட்ட முறையில் உத்தரவு பிறப்பித்ததாக ஒப்புக்கொண்டிருந்தான்.
பிரான்சுக்காக உயிர்த்தியாகம் செய்த ஹீரோக்களையும் காயம்பட்டவர்களையும், அவர்களது குடும்பங்களையும் நாடு நினைவுகூர்கிறது என்று கூறியுள்ள இமானுவல் மேக்ரான், அவர்களது தியாகங்கள் வீணாகப்போகவில்லை.
நமது ஐரோப்பிய மற்றும் அமெரிக்க கூட்டாளிகளுடன் இணைந்து நாம் இந்த போரில் தொடர்ந்து செயலாற்றுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.