அகதிகள் மத்தியில் அவர்களும் சுவிட்சர்லாந்தில் நுழையலாம்: எச்சரிக்கும் அரசியல் கட்சிகள்
ஆப்கானிஸ்தானின் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, அகதிகளின் பின்னணியை ஆராய வேண்டும் என்ற கோரிக்கையை முக்கிய அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ளது.
கட்டுப்பாடின்றி அகதிகளுக்கு வாய்ப்பளித்தால், அது சுவிட்சர்லாந்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறவும் வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து குறைந்தபட்சம் 10,000 அகதிகளையாவது ஏற்றுக்கொள்ள வேண்டும் என SP தேசிய கவுன்சிலர் ஃபேபியன் மோலினா திங்கள்கிழமை வலியுறுத்தியிருந்தார்.
மட்டுமின்றி அதே நாள் பெடரல் கவுன்சிலுக்கும் இதே கோரிக்கையை SP முன்வைத்தது. ஆனால் ஆப்கான் அகதிகள் தொடர்பில் SVP முக்கியமான கருத்தை முன்வைத்துள்ளது.
அதில், இஸ்லாமிய போராளிகள், கடும் குற்றவாளிகள், சட்டத்திட்டங்களுடன் ஒத்துப்போகாதவர்கள் என சமூகத்திற்கு அச்சுறுத்தலானவர்கள் அகதிகள் போர்வையில் சுவிட்சர்லாந்துக்குள் வரலாம்.
இதனால், சுவிட்சர்லாந்துக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என SVP எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால், அகதிகளின் பின்னணியை சோதிக்கும் அதே வேளை அவர்கள் சுவிட்சர்லாந்திற்கு வருவதற்கு முன்பு பாதுகாப்பு சோதனையும் மேற்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தாலிபான்களின் கொடுங்கோல் ஆட்சிக்கு பயந்து தப்பிக்கும் மக்களை கொடூர குற்றவாளிகள் என அடையாளப்படுத்துவது ஏற்க முடியாத கருத்து என அம்னஸ்டி சுவிட்சர்லாந்தின் Beat Gerber தெரிவித்துள்ளார்.