பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் மீது ஆத்திரம்... சட்ட நடவடிக்கை எடுக்கும் இஸ்ரேல்
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை தொடங்குமாறு தனது அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
தடை செய்யும் முடிவு
வரவிருக்கும் இராணுவ கடற்படை வர்த்தக கண்காட்சியில் பங்கேற்க இஸ்ரேலிய நிறுவனங்களை பிரான்ஸ் தடை செய்த நிலையிலேயே இந்த நடவடிக்கை என தகவல் வெளியாகியுள்ளது.
காஸா மற்றும் லெபனானில் முன்னெடுக்கப்படும் தாக்குதல்களில் இஸ்ரேலின் நடத்தை குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ள மேக்ரான், தற்போது இஸ்ரேலிய நிறுவனங்களைத் தடை செய்யும் முடிவுக்கு வந்துள்ளதாகவே கூறப்படுகிறது.
பாரிஸ் நகரில் நவம்பர் 4 முதல் 7ம் திகதி வரையில் Euronaval நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில் கடற்படை வர்த்தக கண்காட்சி முன்னெடுக்கப்படுகிறது.
இந்த நிலையில் இஸ்ரேல் நிறுவனங்களைத் தடை செய்யும் முடிவை பிரான்ஸ் அரசாங்கம் தங்களிடம் உறுதி செய்துள்ளதாக குறிப்பிட்ட Euronaval நிறுவனம், இஸ்ரேல் நிறுவனங்கள் தங்கள் ஆயுதங்களை கண்காட்சியில் பார்வைக்கு வைக்க அனுமதிக்க முடியாது என்றும்,
தூதரக ரீதியாக நடவடிக்கை
ஆனால் கடற்படை வர்த்தக கண்காட்சியில் பார்வையாளர்களாக இஸ்ரேல் நிறுவனங்கள் கலந்துகொள்ளலாம் என மேக்ரான் அரசாங்கம் தெரிவித்துள்ளதாக அறிக்கை ஒன்றில் Euronaval நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேக்ரான் அரசாங்கத்தின் இந்த முடிவால் 7 இஸ்ரேலிய நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதிக்கு எதிராக சட்ட ரீதியாகவும், தூதரக ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வெளிவிவகார அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், இரண்டாவது முறையாக இஸ்ரேலிய நிறுவனங்களை புறக்கணிப்பது, அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனைகளை விதிப்பது உள்ளிட்டவை நட்பு நாடுகளிடையே ஏற்றுக்கொள்ள முடியாத ஜனநாயக விரோத நடவடிக்கைகளாகும் என தெரிவித்துள்ள அமைச்சர் காட்ஸ், கண்காட்சியை மொத்தமாக ரத்துசெய்யுமாறு ஜனாதிபதி மேக்ரானை கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |