பாதுகாப்பு அச்சுறுத்தல்... இந்திய வருகையை ரத்து செய்த இஸ்ரேல் பிரதமர்
இந்த ஆண்டு இறுதியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்காக திட்டமிடப்பட்டிருந்த இந்தியாவுக்கான பயணத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் ஒத்திவைத்துள்ளார்.
வருகை ரத்து
இரண்டு வாரங்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தப் பயணம் தாமதமானது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக டெல்லியில் ஏற்பட்ட மோசமான சம்பவம் இதுவென்றே கூறுகின்றனர்.

இதில், குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டசின் கணக்கானவர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை குறிப்பிட்டே தற்போது இஸ்ரேலிய பிரதமரின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசியாக 2018 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு விஜயம் செய்த நெதன்யாகு, பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, அடுத்த ஆண்டு புதிய திகதியைக் கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் நெதன்யாகு இந்தியாவுக்கு வருகை தர திட்டமிட்டுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆண்டில் மட்டும் நெதன்யாகு தனது திட்டமிட்ட இந்தியப் பயணத்தை ரத்து செய்வது இது மூன்றாவது முறையாகும்.
செப்டம்பர் 17 அன்று இஸ்ரேலில் தேர்தல்கள் நடந்ததால், திட்டமிடல் சிக்கல்களைக் காரணம் காட்டி, நெதன்யாகு செப்டம்பர் 9 அன்று இந்தியாவிற்கான ஒரு நாள் பயணத்தை ரத்து செய்தார். மேலும், ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடப்பதை குறிப்பிட்டும் முன்னர் தமது வருகையை அவர் ரத்து செய்தார்.

காஸா மீதான கொடூர நடவடிக்கைகளால் உலக நாடுகளிடம் தனிமைப்படுத்தப்பட்ட நெதன்யாகு, உலகளவில் தனக்கு ஆதரவு இருப்பதை வெளிப்படுத்தும் முயற்சியாக இந்திய வருகை இஸ்ரேலில் பரவலாகப் பதிவு செய்யப்பட்டது.
மட்டுமின்றி, சர்வதேச நீதிமன்றத்தால் கைதாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நெதன்யாகு, இந்தியாவை தெரிவு செய்ததற்கும் காரணம் இருப்பதாக கூறுகின்றனர்.
பாதுகாப்பாக இருக்கும்
ஜூலை மாதம், நெதன்யாகுவின் அரசியல் கட்சியானது, பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோருடன் அவரது படங்களைக் கொண்ட பதாகைகளை வைத்து, அவரை தனித்து விடப்பட்டவர் அல்ல என குறிப்பிட்டு ஆதரவு திரட்டியது.

காஸா தொடர்பில் இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், உலகத் தலைவர்களுடனான அவரது நெருங்கிய உறவை வெளிக்கொணர்வதிலும், இஸ்ரேலிய அரசியலில் ஒப்பிடமுடியாத அந்தஸ்துள்ள தலைவராக அவரை முன்னிறுத்துவதிலும் அவருக்கு ஆதரவான பரப்புரை அமைப்புகள் கவனம் செலுத்தி வருகிறது.

நெதன்யாகுவின் ஆட்சி நீடித்தால் மட்டுமே இஸ்ரேல் பாதுகாப்பாக இருக்கும் என்றும் பரப்புரை முன்னெடுக்கப்படுகிறது. பிரதமர் மோடி 2017 ஆம் ஆண்டு முன்னெடுத்த இஸ்ரேல் பயணத்தால், அந்த நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல் இந்தியப் பிரதமர் என்ற வரலாறைப் பதிவு செய்தார்.
ஆனால் அதன் பின்னர், இந்தியாவின் பிரபலமான பத்திரிகையாளர்கள், ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரது அலைபேசிகள் இஸ்ரேலின் Pegasus உளவு மென்பொருளால் கண்காணிக்கப்பட்ட சம்பவம் அம்பலமானது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |