இஸ்ரேலிய பெண் பயணிக்கு இந்தியாவில் நேர்ந்த கொடூரம் - இருவர் கைது
இந்தியாவிற்கு சுற்றுலா வந்த இஸ்ரேலிய பெண் கூட்டு வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
இஸ்ரேலிய பெண் பயணி
இஸ்ரேலை சேர்ந்த 27 வயதான பெண் ஒருவர், சுற்றுலாவிற்காக இந்தியாவின் கர்நாடக மாநிலத்திற்கு வருகை தந்துள்ளார்.
நேற்று முன்தினம் அந்த இஸ்ரேலிய பெண், விடுதி உரிமையாளரான பெண் ஒருவர், மற்றும் 3 ஆண்கள் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான ஹம்பி அருகே உள்ள துங்கபத்ரா அருகே இரவு 11 மணியளவில், நின்று நட்சத்திரத்தை ரசித்து கொண்டிருந்துள்ளனர்.
பணம் கேட்டு வாக்குவாதம்
அப்போது இரு சக்கர வாகனத்தில் அங்கு வந்த 3 நபர்கள், முதலில் இங்கு பெட்ரோல் எங்கே கிடைக்கும் என கேட்டுள்ளனர். அதன் பின்னர், அந்த இஸ்ரேலிய பெண்ணிடம் ரூ.100 கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த பெண் தர மறுக்கவே வாக்குவாதம் முற்றி, அங்கே இருந்த ஆண்கள் மூவரையும் அருகே இருந்த கால்வாயில் தள்ளி விட்டுள்ளனர்.
அதன் பின்னர் அந்த இஸ்ரேலிய பெண், மற்றும் விடுதி உரிமையாளரான பெண்ணை மூவரும் கூட்டு வன்கொடுமை செய்துள்ளனர்.
ஒருவர் உயிரிழப்பு
இது தொடர்பாக விடுதி உரிமையாளரான பெண் கொப்பல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
கால்வாயில் தள்ளிவிடப்பட்ட, அமெரிக்கச் சுற்றுலாப் பயணியான டேனியல் மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த பங்கஜ் படேல் நீச்சல் அடித்து உயிர் தப்பியுள்ளனர். ஒடிசாவைச் சேர்ந்த பிபாஸின் உடல் இன்று காலை மல்லாப்பூரில் உள்ள மின் உற்பத்தி அலகு அருகே மீட்கப்பட்டது.
இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக கங்காவதியைச் சேர்ந்த சாய் மல்லு, சேத்தன் சாய் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றத்தில் தொடர்புடைய மூன்றாவது நபரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |