2040 ஆம் ஆண்டில் நிலவில் இந்தியர்கள் இருப்பார்கள் - இஸ்ரோ தலைவர் உறுதி
2040 ஆம் ஆண்டில் நிலவில் இந்தியர்கள் இருப்பார்கள் என இஸ்ரோ தலைவர்நாராயணன் பேசியுள்ளார்.
நிலவில் இந்தியர்கள்
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பிர்லா தொழில்நுட்ப கல்லூரியின் 35வது பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ தலைவர் நாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அந்த நிகழ்வில் இஸ்ரோ தற்போதைய மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்த தகவலை பகிர்ந்து கொண்டார்.
இதில் பேசிய அவர், "2040 ஆம் ஆண்டிற்குள் இந்தியர்களை நிலவில் தரையிறங்க வைப்பதற்கான வழிகாட்டுதல்களை பிரதமர் மோடி வழங்கியுள்ளார். இது இந்தியர்களை நிலவில் தரையிறங்கி, மீண்டும் பாதுகாப்பாக பூமிக்கு கொண்டு வரும் திட்டமாகும்.
ககன்யான் திட்டத்தில் நிறைய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இன்னும் பல சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முன் 3 ஆளில்லா விண்கலங்களை அனுப்பி பரிசோதிக்க உள்ளோம்.
இதன்படி, இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வியோம்மித்ரா(Vyommitra) ரோபோ முதல் பயணத்தை மேற்கொள்ள உள்ளது. அடுத்த ஆண்டில் மேலும் 2 ஆளில்லாத பயணம் மேற்கொள்ளப்படும். அதைத்தொடர்ந்து 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்பப்படுவார்கள்.
இந்தியாவிற்கான விண்வெளி நிலையம்
மேலும், வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்வதற்கான ‘வீனஸ் ஆர்பிட்டர் மிஷன் (VOM)’ திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ‘ஆதித்யா-எல்1’ விண்கலம், ஏற்கனவே 15 டெரா பைட்டுகளுக்கும் அதிகமான தரவுகளை அனுப்பியுள்ளது.
இந்தியாவிற்கான விண்வெளி நிலையத்தை உருவாக்கும் திட்டமான, பாரதிய அந்திரிக்ஷ் நிலையம் (BAS), 2035 ஆம் ஆண்டில் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னர், விண்வெளித் துறையில்1 அல்லது 2 ஸ்டார்ட்அப்கள் மட்டுமே இருந்தன. இன்று, செயற்கைக்கோள் உற்பத்தி, ஏவுதள சேவைகள் மற்றும் விண்வெளி அடிப்படையிலான தரவு பகுப்பாய்வு ஆகியவற்றில் 300 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பணியாற்றி வருகின்றன.
சந்திரயான்-1 மூலம், நிலவில் தண்ணீரைக் கண்டுபிடிப்பதில் இருந்து, நிலவின் தென் துருவத்திற்கு அருகில் சந்திரயான்-3யை மென்மையான தரையிறக்கம் செய்தது வரை, விண்வெளியில் இந்தியா பல உலக சாதனைகளைப் படைத்துள்ளது" என பேசினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |