இஸ்ரோவின் ராக்கெட்டுகள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படுவது ஏன்? விரிவான பின்னணி
கடந்த சில ஆண்டுகளாக, இஸ்ரோவின் பெரும்பாலான ராக்கெட்டுகள் ஸ்ரீஹரிகோட்டா மையத்தில் இருந்துதான் ஏவப்படுகின்றன. இதன் பின்னால் திகைக்கவைக்கும் காரணம் ஒளிந்திருப்பதாக கூறுகின்றனர்.
பூமத்திய ரேகைக்கு அருகில்
இஸ்ரோ தனது பெரும்பாலான ராக்கெட்டுகளை ஸ்ரீஹரிகோட்டா மையத்தில் இருந்துதான் விண்ணில் ஏவி வருகிறது. ஸ்ரீஹரிகோட்டா பகுதியானது பூமத்திய ரேகைக்கு மிக அருகில் அமைந்துள்ளது.
இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கிலும் இருந்து விண்வெளிக்கு அனுப்பப்படும் ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்கள் அனைத்தும் பூமத்திய ரேகையை மையமாக வைத்து பூமியைச் சுற்றி வருகின்றன.
அதனால் அதை செலுத்துவதற்கான இடத்தையும் பூமத்திய ரேகைக்கு அருகிலேயே தெரிவு செய்வார்கள். பூமத்திய ரேகைக்கு அருகில் இருந்து விண்ணில் ஏவும்போது அதற்கான எரிபொருள் குறைவாக தேவைப்படும்.
விண்கலத்தின் எடையும் , செலவும் குறையும். பயண நேரமும் குறையும், அத்துடன் விண்கலத்தின் வெற்றி விகிதமும் அதிகமாக இருக்கும். இந்தியாவில் பூமத்திய ரேகைக்கு மிக அருகாமையில் உள்ள இடமாக ஸ்ரீஹரிகோட்டா தெரிவு செய்யப்பட்டது.
மக்களின் உயிருக்கு ஆபத்து
பெரும்பாலான செயற்கைக்கோள்கள் அல்லது ராக்கெட்டுகள் கிழக்கு திசையில் ஏவப்படுகின்றன. ஸ்ரீஹரிகோட்டா கடலின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ளதால், அது 0.4 கிமீ/வி கூடுதல் வேகத்தைப் பெறுகிறது.
ஸ்ரீஹரிகோட்டாவில் மக்கள் தொகை மிகவும் குறைவு. இங்கு இஸ்ரோ அதிகாரிகள் அல்லது சில மீனவர்களே வசிக்கின்றனர். மேலும் ஏவுதளம் அமைந்துள்ள பகுதி இருபுறமும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவு.
இதனால் ராக்கெட்டை ஏவும்போது ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால், மக்களின் உயிருக்கு ஆபத்து குறைவாகவே இருக்கும். சில காரணங்களால் பணியை நிறுத்த வேண்டியிருந்தால், ராக்கெட்டை எளிதாக கடல் நோக்கி திருப்பி விடலாம்.
இது தவிர ராக்கெட்டை ஏவியதும் அதன் தேவையற்ற பாகங்கள் கடலில் விழுகின்றன. 1971 முதல், இஸ்ரோ தனது பெரும்பாலான செயற்கைக்கோள்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ஏவிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |