100க்கும் மேற்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் ராஜினாமா - அதிரடி முடிவெடுத்த இந்திய அரசு
100க்கும் மேற்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் ராஜினாமா செய்துள்ள நிலையில், விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோ விஞ்ஞானிகள் ராஜினாமா
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் கடந்த சில மாதங்களில், அனுபவம் வாய்ந்த 100க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் ராஜினாமா செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மையத்திலிருந்து மட்டும் சுமார் 80 விஞ்ஞானிகளும், திருவனந்தபுரம், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திலிருந்து சுமார்30 விஞ்ஞானிகளும் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எல்விஎம் 3 (LVM-3) திட்ட இயக்குநர், ஸ்பேடெக்ஸ் (SpaDeX) திட்ட இயக்குநர், சந்திரயான் - 3 திட்டத்தின் உருவகப்படுத்துதல் (simulations) பிரிவு மேலாளர் உள்ளிட்ட பல முக்கிய விஞ்ஞானிகளும் வெளியேறியுள்ளனர்.
என்ன காரணம்?
இந்தியாவில், 400க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. இவை கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 150 மில்லியன் டொலர் முதலீடுகளை ஈர்த்துள்ளன.
விண்வெளி திட்டங்களில் தனியார் நிறுவனங்களின் ஈடுபாட்டை அதிகரிக்க மத்திய அரசு முயற்சித்து வரும் நிலையில், தனியார் நிறுவனங்கள் மூத்த விஞ்ஞானிகளை தங்களது நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் நியமிக்க ஆர்வம் காட்டி வருகின்றன.
இஸ்ரோவில் இருந்து விலகும் விஞ்ஞானிகள் இது போன்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் இணைந்து வருகின்றனர்.

சமீபத்தில், இஸ்ரோ முன்னாள் தலைவர் சோம்நாத் சென்னையை தளமாக கொண்டு இயங்கும் அக்னிகுல் என்று நிறுவனத்தில் இணைந்துள்ளார்.
மூத்த விஞ்ஞானிகளின் தொடர் விலகல்களால் இஸ்ரோவின் ககன்யான் உள்ளிட்ட முக்கிய திட்டங்களில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதனால், ககன்யான் போன்ற முக்கிய திட்டங்களில் பணியாற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகளின் தன்னார்வ ஓய்வு (VRS), ராஜினாமா கோரிக்கைகளை அந்த திட்டங்கள் முடியும் வரை இனி வழக்கமான நடைமுறையாக ஏற்கக் கூடாது என்று என்று அனைத்து இஸ்ரோ மைய இயக்குநர்கள் மற்றும் பிரிவு தலைவர்களுக்கும் விண்வெளித் துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், விஞ்ஞானி/பொறியாளர்-எஸ்ஜி நிலை வரையிலான அதிகாரிகளின் தன்னார்வ ஓய்வு மற்றும் ராஜினாமா கோரிக்கைகளை மைய இயக்குநர்களே ஏற்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை மாற்றி சம்பந்தப்பட்ட மைய இயக்குநர்களின் பரிந்துரையுடன் இறுதி முடிவுக்காக விண்வெளித் துறைக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரோ தலைவர் வி. நாராயணன், "பலர் நிறுவனங்களை விட்டு வெளியேறுவது சாதாரணமான ஒன்றுதான். இந்த புதிய விதியானது விஞ்ஞானிகளைத் தடுத்து வைப்பதற்காக மட்டுமின்றி, நாட்டின் முக்கியத் திட்டங்கள் திடீரெனத் தொய்வடைந்துவிடக் கூடாது என்பதற்காகக் கொண்டு வரப்பட்டுள்ளது. இஸ்ரோ இதனைச் சீராகக் கையாண்டு வருகிறது" என விளக்கமளித்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |