முதல்முறையாக விண்வெளிக்கு பெண் ரோபோவை அனுப்பும் இஸ்ரோ - சுவாரஸ்ய தகவல்கள்
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கு முன்பாக சோதனை முயற்சியாக பெண் ரோபோ ஒன்றை இஸ்ரோ அனுப்புகிறது.
இஸ்ரோவின் கனவுத் திட்டம்
2025ஆம் ஆண்டுகளுள் விண்வெளிக்கு 4 வீரர்களை அனுப்பும் 'ககன்யான்' இஸ்ரோவின் கனவுத் திட்டம் ஆகும்.
இந்த திட்டத்தின்படி விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களின் பெயர்கள் பிரதமர் நரேந்திர மோடியால் வெளியிடப்பட்டது.
வீரர்கள் விண்வெளிக்கு செல்லும் முன்னர், சோதனை அடிப்படையில் காலி விண்கலத்தை முதற்கட்டமாக இஸ்ரோ அனுப்ப உள்ளது.
அந்த விண்கலம் பூமிக்கு திரும்பியவுடன் இரண்டாம் கட்டமாக, ரோபோ ஒன்று விண்வெளிக்கு அனுப்பப்படும். இதற்காக ''வியோமித்ரா'' எனும் ரோபோவை இஸ்ரோ பெண் வடிவத்தில் உருவாக்கியுள்ளது.
இந்த ரோபோ குறித்து சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முன்னாள் துணை இயக்குநரும், ஓய்வுபெற்ற விஞ்ஞானியுமான பி.வி.சுப்பாராவ் கூறுகையில், 'ககன்யான் திட்டத்தின் நோக்கம் 4 விண்வெளி வீரர்களை மூன்று நாட்களுக்கு விண்வெளிக்கு அனுப்புவதாகும். விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் மூன்று நாட்களுக்குப் பிறகு பத்திரமாக பூமிக்கு திரும்புவதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் குறிக்கோள்.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முன், ஒரு ரோபோ மாதிரியை 3 நாட்களுக்கு விண்வெளிக்கு அனுப்பி தங்க வைத்து, பூமிக்கு பத்திரமாக கொண்டு வரும் பணிக்காக இந்த மனித உருவிலான வியோமித்ரா ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது' என தெரிவித்தார்.
மேலும் வியோமித்ராவின் பயணம் சுவாசிப்பது, பிற உயிரியல் காரணிகள், பகல் இரவில் வேறுபடும் தன்மைகள் மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளின்போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் போன்ற விடயங்களை அறிய விஞ்ஞானிகளுக்கு உதவும் எனவும் கூறியுள்ளார்.
வியோமித்ரா ரோபோவின் சிறப்புகள்
- இதற்கு குறிப்பிட்ட அளவிலான நுண்ணறிவு மட்டும் உள்ள வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இது ராக்கெட்டை இயக்குவதற்கான கையேட்டில் உள்ள கட்டளைகளின் அடிப்படையில், விண்வெளிக்கு சென்று திரும்புவதற்கான பணியைச் செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
- இந்த ரோபோவானது தகவல்களை தனது குரலில் கட்டுப்பாடு மையத்தில் உள்ள விஞ்ஞானிகளுடன் பரிமாறும்.
- அத்துடன் விஞ்ஞானிகளுக்கு ராக்கெட்டின் எரிவாயு, மின்சாரம், உயிர் பாதுகாப்பு அமைப்புகளின் செயல்பாட்டையும் இந்த பயணத்தின்போது கண்காணித்து அதுகுறித்த தகவல்களை வியோமித்ரா ரோபோ அனுப்பும்.
- ராக்கெட் பயணத்தின்போது Aerodynamic ஆற்றலால் ஏற்படும் அதிர்வுகளை தாங்கும் வகையில் இந்த வியோமித்ரா ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக நாசா 2011ஆம் ஆண்டில் முதல் மனித உருவ ரோபோவை அனுப்பியது. அதன்பின்னர் ஜப்பான் 2013ஆம் ஆண்டும், ரஷ்யா 2019ஆம் ஆண்டும் ரோபோக்களை அனுப்பியுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |