நாடாளுமன்ற முடிவை மீறி இளைஞருக்கு குடியுரிமை வழங்கிய விவகாரம்: சுவிட்சர்லாந்தில் சர்ச்சை
மாகாண நாடாளுமன்ற முடிவை மீறி, வெளிநாட்டவர் ஒருவருக்கு சுவிஸ் நீதிமன்றம் ஒன்று சுவிஸ் குடியுரிமை வழங்கியுள்ளது.
சிறுவயதில் சிறு திருட்டு ஒன்றில் ஈடுபட்டதற்காக அவருக்கு குடியுரிமை மறுக்கப்பட்டிருந்தது.
Aargau மாகாணத்தில் 18 வயது இளைஞர் ஒருவருக்கு மாகாண நாடாளுமன்ற முடிவை மீறி சுவிஸ் குடியுரிமை வழங்கியுள்ளது நீதிமன்றம் ஒன்று.
அவர் சிறுவயதில் ஒரு USB ட்ரைவையும், சட்டை ஒன்றையும் திருடியதற்காக, அவருக்கு குடியுரிமை அளிக்கக்கூடாது என 74க்கு 50 என்ற வாக்கு வித்தியாசத்தில் மாகாண நாடாளுமன்றம் முடிவு செய்தது.
திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 122 சுவிஸ் ஃப்ராங்குகள்.
நாடாளுமன்றத்தின் முடிவு தன்னிச்சையானது, முறையற்றது என்று கூறி நாடாளுமன்றத்தின் முடிவை நிராகரித்த Aargau மாகாண உயர்நீதிமன்றம், அந்த இளைஞருக்கு சுவிஸ் குடியுரிமை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
ஆனால், நீதிமன்றத்தின் தீர்ப்பு, சுவிஸ் குடியுரிமையைக் கட்டுப்படுத்தும் கட்டுப்பாடான விதிகள் தொடர்பில் கேள்விகளை எழுப்பியுள்ளதால் சர்ச்சை உருவாகியுள்ளது.
குடியுரிமை வழங்கப்படும் நபர் குற்றப்பின்னணி கொண்டவராக இருக்கக்கூடாது என்பது ஒரு நிபந்தனையாகும்.
அத்துடன், எவ்வளவு காலம் ஒருவர் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்தார், அவரது உள்ளூர் மொழித்திறன் என்ன, அவர் சுவிஸ் மக்களுடன் ஒருங்கிணைந்து வாழ்ந்தாரா என்பது போன்ற விடயங்களும் முக்கியமானவை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.