குழந்தையின் மருந்துக்காக மருத்துவமனைகளைத் தேடி அலைந்த பரிதாபம்: இலங்கையில் வாழும் வெளிநாட்டுப் பெண் கூறும் தகவல்
*குழந்தைக்கான மருந்துகளுக்காக மருத்துவமனை மருத்துவமனையாக ஏறியிறங்கிய பெண்.
*பலர் வெளிநாடுகளுக்கு செல்லவும் முயன்று வருவதாக தெரிவிக்கும் தம்பதியர்.
மலேசிய நாட்டவரான ஒரு பெண் தன் குழந்தையுடன் இலங்கையில் வாழ்ந்து வரும் நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்ட தன் குழந்தைக்கு மருந்து வாங்குவதற்காக ஒவ்வொரு மருத்துவமனையாக ஏறியிறங்கிய சோகத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
மலேசியாவைச் சேர்ந்த Kim Tham (36), 2019 முதல் இலங்கை தலைநகர் கொழும்புவில் வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் தன் குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்படவே மருத்துவமனைக்குக் குழந்தையைக் கொண்டு சென்றுள்ளார் அவர். மருத்துவர் ஆன்டிபயாட்டிக்குள் பரிந்துரைக்க, ஐந்து பெரிய மருத்துவமனைகளுக்குச் சென்றும் அந்த மருந்துகள் கிடைக்கவில்லையாம்.
கடைசியில், அவரது மருத்துவரே ஒரு சிறிய மருந்தகத்தில் மருந்து இருப்பதைத் தெரிந்துகொண்டு Kim Thamக்கு தகவல் கொடுக்க, உடனே அங்கு ஓடியிருக்கிறார். அங்கே சென்றால், அந்த மருந்தக ஊழியர், பரிந்துரைக்கப்பட்ட மூன்று போத்தல் மருந்துகளைத் தர இயலாது என்று கூறிவிட, கெஞ்சிக் கூத்தாடி இரண்டு போத்தல்கள் ஆன்டிபயாட்டிக்குகள் வாங்கிக்கொண்டு வீடு வந்து சேருவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டிருக்கிறது Kim Thamக்கு.
தற்போது விடுமுறைக்காக கனடா வந்திருக்கும் Kim Tham, நாட்டை விட்டு வெளியேற விரும்பும் மக்களால் விமான நிலையங்கள் கூட்ட நெரிசலை சந்தித்து வருவதாக தெரிவிக்கிறார்.
Image - thestatesman
மக்கள் வெளிநாடுகளில் வேலை தேடவும், எந்த நாட்டிற்கு போக முடியுமோ அங்கே செல்லவும் முயன்று வருவதாக தெரிவிக்கும் Kim Tham, நிலைமை இன்னமும் மோசமாகுமானால், நாங்களும் இலங்கையை விட்டு வெளியேறத் தயாராகிவருகிறோம் என்கிறார்.
அவரைப் போலவே மற்றொரு மலேசியரான Chong Mun Yi (35) தன் கணவரான Kelvin Lauஉடன் இலங்கையிலுள்ள தெகிவளையில் நான்கு ஆண்டுகளாக வாழ்ந்துவருகிறார்.
Kelvin Lau இலங்கையிலிருக்கும் பிரெஞ்சு தொழிற்சாலை ஒன்றின் நிர்வாக இயக்குநராக பணிபுரிகிறார். அவரது மனைவியான Mun Yi, பல மணி நேர மின்வெட்டு நிலவுவதாகவும், வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் முதலான அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பது கடினமாக இருப்பதாகவும், கிடைப்பதை வாங்கி உயிர் வாழ்வதற்காக உண்டு வருவதாகவும் தெரிவிக்கிறார்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பெரும்பாலான மக்கள் நடந்தோ சைக்கிளிலோ பயணிப்பதாகவும், பொதுப்போக்குவரத்து கூட குறைவாகவே இருப்பதாகவும் தெரிவிக்கும் Kelvin Lau, தற்போது தாங்கள் வழும் பகுதியில் நிலைமை சற்று முன்னேறி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.