சுவிஸ் குடியுரிமை பெறுவது இவர்களுக்கு எளிது: காரணம் என்ன?
அதிக கல்வித்தகுதி கொண்டவர்களுக்கு சுவிஸ் குடியுரிமை பெறுவது எளிதாகும்.
முறையான தொழிற்கல்வி கற்றோருக்கு சுவிஸ் குடியுரிமை பெறுவது எளிதாகும். அதே நேரத்தில், சுவிஸ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் ஒருவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதும், அவரது அனுபவமும் கூட முக்கிய காரணிகளாகும்.
கொள்கைப்படி, சுவிட்சர்லாந்தில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வாழ்ந்த வெளிநாட்டவர்கள், நிரந்தர வாழிட உரிமமான C permit வைத்திருந்து, உள்ளூர் மொழியை பேசி, நாட்டுடன் ஒருங்கிணைந்து வாழும் பட்சத்தில் அவர்கள் சுவிஸ் குடியுரிமை பெறலாம்.
ஆனால், நடைமுறையில், சுவிஸ் குடியுரிமை பெறும் நடைமுறை அவ்வளவு எளிதானது அல்ல.
அதிகம் கற்றவர்களுக்கு குடியுரிமை பெறுதல் எளிது
நீங்கள் எந்த அளவுக்கு படித்திருக்கிறீர்கள் என்பது சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கு எந்த அளவுக்கு முக்கிய காரணியோ, அதே அளவுக்கு, நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதும் முக்கியமாகும்.
நடைமுறையில் கூறினால், 2020ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, சுவிஸ் குடியுரிமை பெற்றவர்களில் 30 சதவிகிதத்தினர் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்தான். வெறும் 6 சதவிகிதத்தினர் மட்டுமே ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
ஜேர்மானியர்களும் இலங்கையர்களும்: ஒரு ஒப்பீடு
உதாரணமாக, Lucerne மாகாணத்தில், 2019ஐ விட 2020இல் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு ஜேர்மானியர்கள் சுவிஸ் குடியுரிமை பெற்றுள்ளார்கள். அதே நேரத்தில், சுவிஸ் குடியுரிமை பெற்ற இலங்கையைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையோ, முக்கால் பங்கு அளவுக்கு குறைந்துள்ளது.
ஆப்பிரிக்கா, அரபு நாடுகள் அல்லது இலங்கையிலிருந்து வருவோருக்கு பெரும்பாலும் வாய்ப்பே இல்லை என்கிறார் Lucerne குடியுரிமை ஆணைய தலைவரான Felix Kuhn.
இதனால், சமுதாயத்தில் இரு பிரிவினர் உருவாகிவிடுகிறார்கள் என்று கூறும் அவர், சில புலம்பெயர்ந்தோர், தங்களுக்கு குடியுரிமை கிடைப்பது கடினம் என்பதை உணர்வதால், தங்களுக்கு சுவிட்சர்லாந்தில் வரவேற்பு இல்லை என்று எண்ணி தங்களை தனிமைப்படுத்திக்கொள்கிறார்கள், அதாவது, சுவிஸ் சமுதாயத்துடன் தங்களை ஒருங்கிணைத்துக்கொள்ளும் முயற்சியைக் கைவிட்டுவிடுகிறார்கள் என்கிறார்.
மூன்றாம் நாட்டவர்கள் சுவிஸ் குடியுரிமை பெறுவது ஏன் கடினம் என்பது விளக்கப்படவில்லை. ஆனாலும், ஐரோப்பியர்களின் தடையில்லாப் போக்குவரத்து உரிமை முதலான விடயங்கள், அவர்கள் சுவிஸ் குடியுரிமை பெறுவதை எளிதாக்க உதவுவதாக கருதப்படுகிறது.