புடினுக்கு மோசமான நோய் என கூறப்பட்டது உண்மையில்லை... பிரித்தானிய இராணுவத் தலைவர் பரபரப்புத் தகவல்
ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறப்பட்டது உண்மையான தகவல் இல்லை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பிரித்தானிய இராணுவத் தலைவர்.
ரஷ்ய ஜனாதிபதி புடின் மோசமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார், அவரைக் கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டு வருகிறது என்பது போன்ற செய்திகள் எல்லாம், அவ்வாறு நடக்கவேண்டும் என ஆசைப்படும் சிலரின் கருத்துக்கள்தான் என தான் கருதுவதாக, பிரித்தானிய இராணுவ வீரர்களின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் அட்மிரல் ரடாகின் (Admiral Sir Tony Radakin) தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா தனது அடுத்த பிரதமரைத் தேர்வு செய்யும் நடவடிகைகளில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், பிரித்தானியாவின் அடுத்த தலைவர் ரஷ்யா பிரித்தானியாவுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் என்பதை அறிந்திருக்கவேண்டும் என்று கூறியுள்ள அட்மிரல் ரடாகின், ரஷ்யாவால் பிரித்தானியா எதிர்கொள்ளும் சவால் பல ஆண்டுகளுக்கு நீடிக்கலாம் என்கிறார்.
credit - ndtv
ஒரு நாட்டின் இராணுவத்தினர் என்ற முறையில், நாங்கள் ரஷ்யாவில் ஓரளவுக்கு நிலையான ஆட்சி நிலவுவதைக் காண்கிறோம் என்று கூறும் அட்மிரல் ரடாகின், ரஷ்ய ஜனாதிபதி புடின் எந்த எதிர்ப்பையும் அடக்க வல்லவர் என்பதைக் கண்டிருக்கிறோம், ரஷ்யாவின் ஆட்சி முறை ஒரு குறிப்பிட்ட படிநிலையில் அமைக்கப்பட்டுள்ளது, ஆகவே, அவருக்கு சவால் விடும் நோக்கம் ரஷ்யாவில் உச்சத்திலிருக்கும் யாருக்கும் இருக்காது என்றே தான் கருதுவதாகவும் தெரிவிக்கிறார்.
உக்ரைன் போரில் ரஷ்யா பெருமளவில் இழப்பைச் சந்தித்தாலும், அது ஒரு அணு ஆயுத நாடாகவே நீடிக்கிறது என்று கூறும் அட்மிரல் ரடாகின், அதற்கு சைபர் திறன் உள்ளது, அதற்கு விண்வெளி திறன் உள்ளது, அத்துடன் கடலுக்குக் கீழும் அதன் திட்டங்கள் உள்ளன. ஆகவே, கடலுக்கடியில் செல்லும் உலகின் தகவல் தொடர்பு கேபிள்களை சேதப்படுத்துவதாக ரஷ்யாவால் அச்சுறுத்தல் விடுக்க முடியும் என்றும் கூறியுள்ளார் அட்மிரல் ரடாகின்.