2 மில்லியன் பணியாளர்களுக்கு இனி இது கட்டாயம்: பிரான்ஸ் அறிவிப்பு
பிரான்சில் இனி சுமார் 2 மில்லியன் பணியாளர்களுக்கு சுகாதார பாஸ் கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது.
பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி பெறுவதை ஊக்குவிக்கும் வகையில், நேற்று முதல் இந்த விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய விதியின்படி, பொதுமக்களை நேருக்கு நேராக சந்திக்கும் பணியில் இருப்போர், உதாரணமாக காபி ஷாப்கள், திரையரங்குகள், பொதுப்போக்குவரத்து ஆகியவற்றில் பணிபுரிவோர் இனி கட்டாயம் தாங்கள் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டோம் அல்லது குறைந்தது 72 மணி நேரத்திற்கு முன் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் தங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான ஆதாரத்தைக் காட்டியாகவேண்டும்.
இன்னொரு பக்கம், பொதுமக்கள் உணவகங்களுக்கோ, பொழுதுபோக்கு அம்சங்கள் நடைபெறும் இடங்களுக்கோ செல்ல சுகாதார பாஸ் கட்டாயம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.