இனி இதையும் பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்குள் கொண்டுவரக்கூடாது... பிரெக்சிட் கட்டுப்பாட்டால் பிரித்தானியர்கள் கவலை
பிரெக்சிட்டால் ஏற்படும் தொல்லைகள் நாள்தோறும் காளான் போல புதிது புதிதாக முளைத்துக்கொண்டே இருக்கின்றன.
முதலில் பிரெக்சிட்டால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மட்டுமே நஷ்டம் என கருதப்பட்ட நிலையில், தினந்தோறும் புதிது புதிதாக பிரித்தானியர்களும் பல்வேறு எரிச்சலூட்டும் விடயங்களை சந்தித்து வருகின்றனர்.
யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப்போட்டுக்கொண்டது போல, முதலில் பிரித்தானியாவின் மீன் வர்த்தகத்துக்கு வந்தது தொல்லை.
இப்போது, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வாழும் பிரித்தானியர்களின் பொழுதுபோக்குக்கு கூட தொல்லை வந்துள்ளது.
பிரான்சில் வாழும் பிரித்தானியர்கள், தங்கள் நாட்டில் ஆசையாக வளர்க்கும் தாவரங்களை பிரான்சுக்கு தங்களுடன் கூடவே கொண்டு வந்து, அவற்றை பிரான்சில் பயிரிட்டு வளர்ப்பது உண்டு.
ஆனால், இப்போது அதற்கும் பிரச்சினை வந்துவிட்டது. ஆம், பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு தாவரங்களை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது
சில தாவர நோய்கள் மற்றும் களைகள் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழைவதை தவிர்ப்பதற்காக வெளிநாடுகளிலிருந்து தாவரங்களை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தாவரங்களின் விதைகளை துறைசார்ந்த நிபுணர் ஒருவரிடம் பெற்ற சான்றிதழுடன் பிரான்சுக்குள் கொண்டு வர அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதற்கு ஆகும் செலவைக் கணக்கிட்டால், பிரித்தானியாவிலிருந்தது தாவர விதைகளைக் கொண்டுவருவதற்கு பதிலாக, பிரான்சிலேயே உங்களுக்குப் பிடித்த தாவரங்களை வாங்கிக்கொள்ளலாம், அவ்வளவு செலவு பிடிக்கும் வேலை அது!