இந்திய அணியுடன் இல்லாதது கஷ்டமாக இருக்கு! என் குழந்தையை பார்க்கவில்லை என்பதால்... நடராஜன் உருக்கம்
விஜய் ஹசாரே தொடரில் தமிழக அணியில் இடம்பெறுவது தொடர்பாக பிசிசிஐ தான் முடிவெடுக்கும் என தமிழக வீரர் நடராஜன் கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியைச் சோ்ந்த நடராஜன் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து அசத்தலாக பந்துவீசி வியக்க வைத்தார்.
இந்நிலையில் நடராஜன் அளித்துள்ள பேட்டியில், பிசிசிஐ அனுமதி அளித்தால் (தமிழக அணிக்காக விஜய் ஹசாரே) ஒருநாள் போட்டியில் நிச்சயமாக விளையாடுவேன். சையத் முஷ்டாக் அலி போட்டிக்காக நான் விளையாட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்கள்.
ஆனால் கடந்த 6 மாதங்களாகத் தொடர்ச்சியாக விளையாடி வருவதால் ஓய்வு எடுக்கச் சொல்லி பிசிசிஐ அறிவுறுத்தியது. சென்னை டெஸ்டுகளில் இந்திய அணியில் நான் இடம்பெறவில்லை.
இந்திய அணியுடன் இல்லாதது கஷ்டமாக இருக்கிறது. கடந்த சில மாதங்களாக அணியுடனே இருந்துவிட்டு இப்போது இல்லாதது கடினமாக இருக்கிறது.
ஆனால் எனக்கு ஒரு இடைவெளி தேவை என்பதால் இதைப் புரிந்துகொள்கிறேன். கடந்த 6 மாதங்களாக என் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்கவில்லை, என் குழந்தையைப் பார்க்கவில்லை என்பதால் இதில் எனக்குச் சம்மதமே.
சென்னைக்கு வந்து எனது பயிற்சியைத் தொடங்குவேன். உடற்தகுதியில் என் கவனம் தற்போது உள்ளது. மூன்று வகைப் போட்டிகளிலும் நான் விளையாட வேண்டும் என்றால் உடற்தகுதியில் நான் முழுமையடைய வேண்டும் என கூறியுள்ளார்.
