நிரந்தரக் குடியிருப்பு அனுமதி இருந்தும் பிரித்தானியாவை விட்டு வெளியேற்றப்படும் நிலைமைக்கு ஆளாகியுள்ள பெண்...
பிரித்தானியாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்று, 14 ஆண்டுகளாக வாழ்ந்துவந்தும், வெளிநாட்டவரான பெண் ஒருவர் பிரித்தானியாவை விட்டு வெளியேற்றப்படும் நிலைமைக்கு ஆளாகியுள்ளார்.
மகளின் மருத்துவக் காப்பீடு அட்டையை புதுப்பிக்கச் சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
இத்தாலி நாட்டவரான சில்வானா, பிரித்தானியாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்று, 14 ஆண்டுகளாக குடும்பத்துடன் வாழ்ந்துவருகிறார். அவரது கணவர் பிரித்தானியர், மகள், இரட்டைக் குடியுரிமை கொண்டவர்.
இந்நிலையில், மகளுடைய மருத்துவக் காப்பீடு அட்டையை புதுப்பிப்பதற்காக விண்ணப்பித்துள்ளார் சில்வானா. அப்போது, சில்வானாவின் நிரந்தரக் குடியிருப்பு அட்டை செல்லாது என்று கூறியுள்ளார்கள் அதிகாரிகள்.
நிரந்தரக் குடியிருப்பு அட்டைக்கு காலாவதி திகதியே கிடையாதே, அது எப்படி செல்லாமல் போகும் என சில்வானா திகைக்க, அப்போதுதான் அவருக்கு ஒரு உண்மை தெரியவந்துள்ளது.
தொடர்ந்து பாதிப்புகளை ஏற்படுத்திவரும் பிரெக்சிட்
2020ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 31ஆம் திகதி பிரெக்சிட் முழுமையாக நிறைவேறியது. அதாவது, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது.
அதற்கு முன்பே, அதாவது, பிரித்தானியா பிரெக்சிட்டை நிறைவேற்ற பரபரப்பாக வேலைகளை நடத்திக்கொண்டிருக்கும்போதே, 2019ஆம் ஆண்டே, பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் தொடர்பில் சில விதிகளில் மாற்றங்கள் செய்துள்ளது பிரித்தானிய அரசு.
Photograph: Amer Ghazzal/Rex/Shutterstock
அதன்படி, பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள், தொடர்ந்து பிரித்தானியாவில் வாழவேண்டுமானால், ஐரோப்பிய ஒன்றிய குடியமர்தல் (EU settlement) என்னும் ஒரு திட்டத்துக்கு மீண்டும் விண்ணப்பிக்கவேண்டும் என்பதுதான் அது.
ஆனால், பிரித்தானியாவில் வாழும் பல ஐரோப்பிய ஒன்றியக் குடிமக்கள் இந்த விதிமாற்றம் குறித்து அறிந்துகொள்ளாமலே இருக்கிறார்கள். அவர்களில் சில்வானாவும் ஒருவர்!
பிரித்தானியாவை விட்டு வெளியேற்றப்படும் நிலை
விடயம் என்னவென்றால், இந்த விதியைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியக் குடிமக்கள் ஐரோப்பிய ஒன்றிய குடியமர்தல் திட்டத்துக்கு விண்ணப்பிப்பதற்காக 2021 ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் பலருக்குத் தெரியவில்லை.
ஆக, சில்வானா அந்த அவகாசத்தையும் தாண்டி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பிரித்தானியாவில் வாழ்ந்துவந்துள்ளார். எனவே, அவர் பிரித்தானியாவை விட்டு வெளியேற்றப்படலாம் என்னும் நிலை உருவாகியுள்ளது.
Photograph: Stefan Rousseau/PA
தாமதமாக விண்ணப்பிப்போரின் விண்ணப்பங்கள் இன்னமும் பரிசீலிக்கப்பட்டுவரும் நிலையில், சில்வானாவின் தரப்பில் சரியான காரணம் கொடுக்கப்படுமானால், அதை உள்துறை அலுவலகம் ஏற்றுக்கொள்ளுமானால், ஒருவேளை சில்வானா தப்பலாம். இல்லையென்றால், அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து பிரித்தானியாவை விட்டு வெளியேற்றப்படக்கூடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |