ரஷ்ய எரிவாயுக்குழாய் சேதப்படுத்தப்பட்ட விவகாரம்: உக்ரைன் நாட்டவரை நாடுகடத்த ஒப்புதல்
ரஷ்யாவிலிருந்து ஐரோப்பாவுக்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பில் இத்தாலி நாட்டில் கைது செய்யப்பட்ட உக்ரைன் நாட்டவரை ஜேர்மனிக்கு நாடுகடத்த இத்தாலி நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
ரஷ்ய எரிவாயுக்குழாய் சேதப்படுத்தப்பட்ட விவகாரம்
ரஷ்யாவிலிருந்து ஐரோப்பாவுக்கு எரிவாயுவைக் கொண்டு செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த Nord Stream 1 மற்றும் 2 என்னும் குழாய்களுக்கு அருகில், 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ஆம் திகதி, வெடிவிபத்துக்கள் நடந்துள்ளதை டென்மார்க் அதிகாரிகள் கண்டுபிடித்தார்கள்.

மூன்று குழாய்கள் சேதமாகியதைத் தொடர்ந்து எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்ட நிலையில், அது நாசவேலை என சந்தேகம் ஏற்பட்டது.
அந்தக் குழாய்கள் ஜேர்மனிக்கு சொந்தமானவை என்பதாலும், அவை டென்மார்க் மற்றும் ஸ்வீடன் கடற்பகுதியில் சேதமடைந்ததாலும், மூன்று நாடுகளும் அந்த குழாய்கள் சேதப்படுத்தப்பட்ட விடயம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவந்தன.
இந்நிலையில், எரிவாயுக் குழாய்கள் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில், சந்தேக நபர் ஒருவர் கடந்த மாதம் இத்தாலி நாட்டில் கைது செய்யப்பட்டார். உக்ரைன் நாட்டவரான அவரது பெயர் Serhii K.
உக்ரைன் நாட்டவரை நாடுகடத்த ஒப்புதல்
Serhii ஜேர்மனிக்கு நாடுகடத்தப்பட இருந்த நிலையில், இத்தாலியின் Court of Cassation என்னும் நீதிமன்றம், நாடுகடத்துவதற்கான நடைமுறை செயல்பாடுகளில் தவறுகள் இருப்பதாகக் கூறி அவரை நாடுகடத்துவதை நிறுத்திவைத்தது.

இந்நிலையில், தற்போது அவரை ஜேர்மனிக்கு நாடுகடத்த நீதிமன்றம் ஒப்புதலளித்துள்ளதாக Serhiiயின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |