மாட்டிறைச்சி என ஏமாற்றி விற்கப்பட்ட பொருள்: பல விதங்களில் ஏமாற்றப்பட்டதால் கோபத்தில் மக்கள்
2013ஆம் ஆண்டு, ஐரோப்பா முழுவதும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மாட்டிறைச்சி திரும்பப் பெறப்பட்ட விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதற்குக் காரணம், மாட்டிறைச்சி என குறிப்பிடப்பட்டிருந்த அட்டைப்பெட்டிகளுக்குள் இருந்தது மாட்டிறைச்சி அல்ல, குதிரை இறைச்சி!
அத்துடன், அந்த இறைச்சி விற்பனையாளர்கள், குதிரைகளை ஓய்வு இல்லத்திற்கு அனுப்புவதாகக் கூறி குதிரை உரிமையாளர்களிடமிருந்து வாங்கியிருக்கிறார்கள்.
தங்கள் குதிரைகள் தங்கள் இறுதிக்காலத்தை மகிழ்ச்சியாக கிராமப்புறங்களில் செலவிட இருக்கின்றன என்று நம்பி குதிரைகளின் உரிமையாளர்கள் அவற்றை ஒப்படைக்க, குதிரைகளை வாங்கியவர்களோ, நேரே அவற்றை கசாப்புக் கடைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.
அத்துடன், இறைச்சி வியாபாரிகளும் கால்நடை மருத்துவர்களும் இணைந்து நடத்தியுள்ள இந்த மோசடியில் பல ஆவண மோசடிகள் உட்பட ஐரோப்பிய ஒன்றிய விதிகள் பல மீறப்பட்டுள்ளன.
மேலும், வழக்கின் முக்கிய குற்றவாளியான பெல்ஜியம் நாட்டவரான Jean-Marc Decker (58) என்பவர், சாப்பிடுவதற்கு கொஞ்சமும் தகுதியற்ற குதிரை இறைச்சியை விநியோகித்திருக்கிறார்.
இந்த வழக்கில், பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தைச் சேர்ந்த 18 பேர் மீது வழக்குத் தொடரப்பட்ட நிலையில், பிரான்சிலுள்ள Marseille நகரில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.