இளவரசர் பிலிப் அமைதியாக இறந்தது வருத்தமளிக்கிறது! அவர் வலியுடன் இறந்திருக்க தகுதியானவர்.. சர்ச்சையை கிளப்பிய கனடிய இளம்பெண்
பிரித்தானிய இளவரசர் பிலிப் மரணம் தொடர்பில் கனடிய பெண்ணொருவர் வெளியிட்ட கருத்து பலத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பிரித்தானிய இளவரசர் பிலிப் நேற்று முன் தினம் தனது 99வது வயதில் காலமானார்.
அவர் மறைந்த தகவல் தி ராயல் பேமிலி அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது.
அதில், நிம்மதியான மற்றும் அமைதியான முறையில் பிலிப் காலமானார் என கூறப்பட்டிருந்தது. அந்த பதிவுக்கு கீழே கனடாவை சேர்ந்த பிரபல எழுத்தாளரான கரீன் கியர் என்ற இளம்பெண் வெளியிட்ட ஒரு பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதாவது, அமைதியான முறையில் அவர் இறந்தார் என்பதை கேள்விப்பட்டு வருத்தப்பட்டேன். அவர் வலியுடன் இறந்திருக்க தகுதியானவர் என பதிவிட்டார்.
அந்த பதிவானது 17000 லைக்குகளை கடந்து வைரலானது. இந்த மோசமான பதிவை வெளியிட்டதற்கு எந்தவொரு மன்னிப்பும் கரீன் கேட்கவில்லை.
பலரும் அவரை திட்டிய போதும் உங்கள் வேலையை பாருங்கள் என கூறியிருந்தார். இந்த நிலையில் கரீன் பிரபல பத்திரிக்கையான கார்டியனில் வேலை செய்கிறார் என கூறப்பட்ட நிலையில் அவர் மீது அந்த பத்திரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்தனர்.
இது குறித்து பேசிய கார்டியன் பத்திரிக்கை செய்தி தொடர்பாளர், கரீன் கார்டியன் பத்திரிக்கையில் எழுத்தாளர் கிடையாது.
அவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்காக ஒரு கட்டுரை எழுதினார். அவரது கருத்துக்கள் தி கார்டியனின் கருத்துக்களை பிரதிபலிக்கவில்லை என விளக்கமளித்துள்ளார்.