சமூக ஊகடங்களில் பிள்ளைகளின் புகைப்படங்கள்: பெற்றோருக்கு ஒரு எச்சரிக்கை
சமூக ஊடகங்களில் பிள்ளைகளின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்வது தொடர்பில் பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.
பெற்றோருக்கு ஒரு எச்சரிக்கை
காலை குட்மார்னிங் சொல்வது முதல் இரவு குட்நைட் சொல்வது வரை, செய்யும் அன்றாட நிகழ்வுகள் அனைத்தையும் சமூக ஊடகங்களில் புகைப்படங்களாக பதிவேற்றம் செய்வது இன்று பலருக்கு வழக்கமான ஒன்றாகிவிட்டது.

ஆனால், அப்படி சமூக ஊடகங்களில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதில் பல பிரச்சினைகள் உள்ளன.
குறிப்பாக, பிள்ளைகளுக்கு அவை பல பிரச்சினைகளை உருவாக்கக்கூடும் என பிரித்தானிய குற்றவியல் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் எச்சரித்துள்ளன.
AI என்னும் செயற்கை நுண்ணறிவால் பல பயன்கள் இருந்தாலும், அதை தவறாக பயன்படுத்தும் ஒரு கூட்டம் இருந்துகொண்டேதான் இருக்கிறது.

அதாவது, சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யும் பிள்ளைகளின் புகைப்படங்களை AI உதவியுடன் ஆபாச படங்களாக மாற்றி, அவற்றைக் காட்டி மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்கள் பல இருக்கின்றன.
ஆகவே, பிள்ளைகளின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்வதில் ஆபத்து உள்ளது என்று கூறியுள்ள பிரித்தானிய தேசிய குற்றவியல் ஏஜன்சி, பெற்றோருக்கு மூன்று ஆலோசனைகளைக் கூறியுள்ளது.
அதாவது, சமூக ஊடகக் கணக்குகளில் பிரைவசி விடயத்தில் கவனம் செலுத்துதல், தங்கள் பிள்ளைகளின் புகைப்படங்களை யார் பார்க்கமுடியும் என்பதை முடிவு செய்தல் மற்றும் பள்ளிகள் போன்ற அமைப்புகள், தங்கள் பிள்ளைகளின் புகைப்படங்களை பயன்படுத்த அனுமதி பெறுதல் ஆகிய மூன்று விடயங்களை பின்பற்றுமாறு பிரித்தானிய தேசிய குற்றவியல் ஏஜன்சி அறிவுறுத்தியுள்ளது.
சில பகீர் புள்ளிவிவரங்கள்
இந்நிலையில், இந்த AIயால் பிள்ளைகள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்த சில புள்ளிவிவரங்களை பிரித்தானிய தேசிய குற்றவியல் ஏஜன்சியும், Internet Watch Foundation என்னும் தொண்டு நிறுவனமும் வெளியிட்டுள்ளன.

கடந்த ஆண்டில், AIயால் ஆபாச படங்களாக மாற்றப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்ட பிள்ளைகளின் படங்களின் எண்ணிக்கை 14 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
2025ஆம் ஆண்டில், 8.029 அத்தகைய புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆக, இத்தகைய அபாயங்களைத் தவிர்ப்பதற்காக, உங்கள் பிள்ளைகளின் சமூக ஊடகக் கணக்குகளை ’தனிப்பட்டது’ என்னும் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக்கொள்வதை உறுதி செய்து கொள்ளுங்கள், உங்களுக்கென்று அமைக்கப்பட்டுள்ள, உங்கள் நண்பர்களைக் கொண்ட சிறிய குழுவில் மட்டும் பிள்ளைகளின் புகைப்படங்களை பகிருங்கள், அத்துடன், உங்கள் பிள்ளைகளின் புகைப்படங்களை பள்ளிகள் பயன்படுத்தவேண்டுமானால், உங்கள் அனுமதி பெறுவது அவசியம் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள் என பிரித்தானிய தேசிய குற்றவியல் ஏஜன்சியும், Internet Watch Foundation என்னும் தொண்டு நிறுவனமும் அறிவுறுத்தியுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |